கிருஷ்ணகிரி அருகே போலி மதுபான தொழிற்சாலை நடத்தி, மதுபானங்கள் விற்பனை செய்து வந்த மூவரை போலீசார் நேற்று (ஜனவரி 30) கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியை அடுத்த கந்திக்குப்பம் அருகே நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த டாடா சுமோவை சோதனை செய்தபோது, வண்டியில் 500க்கும் மேற்பட்ட போலி மதுபான பாட்டில்களை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்திய டாடா சுமோவை பறிமுதல் செய்து, ஓமலூரை சேர்ந்த டிரைவர் கோவிந்தராஜை (51 வயது) கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல், பர்கூர் அடுத்த வாணியம்பாடி பிரிவு சாலையில், கிருஷ்ணகிரியில் இருந்து பர்கூர் நோக்கி வந்த மாருதி 800 காரை நிறுத்தி சோதனை செய்ததில், 245 லிட்டர் எரிசாராயம் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து டிரைவர் பிரகாஷை (36 வயது) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பிரகாஷின் நண்பரான காரிமங்கலத்தை சேர்ந்த ஜெகதீசுடன் சேர்ந்து, போலி மதுபானம் தயாரிப்பதற்கு கொண்டு சென்றது தெரிந்தது. போலி மதுவை தயாரிக்க உதவியதாக, பிரகாஷின் மனைவி ஜானகியை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து இரண்டு மாருதி கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள காரிமங்கலத்தை சேர்ந்த ஜெகதீசை போலீசார் தேடி வருகின்றனர்.�,