ிரியாணிக்கு மயங்காதோர் உண்டா… ஆனால், இன்றைய நிலையில் கடைகளில் வாங்கி சாப்பிடும் பிரியாணிகளைப் பற்றி ஆயிரமாயிரம் புகார்கள். அதுமட்டுமல்ல… கோடைக்கேற்ற சிறந்த உணவு என்று பிரியாணியைச் சொல்ல முடியாது. இந்த நிலையில் பிரியாணி சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்று அடம்பிடிப்பவர்களுக்கு ஹெல்த்தியான இந்த கீரை பனீர் பிரியாணி செய்து கொடுத்து அசத்தலாம்.
**என்ன தேவை? **
சுக்காங்கீரை – ஒரு கட்டு
பாஸ்மதி அரிசி – 2 கப்
பனீர் – 200 கிராம் (துண்டுகளாக்கவும்)
வெங்காயம் – 4
தக்காளி – 3
பட்டை – 3 சிறிய துண்டுகள்
ஏலக்காய், கிராம்பு – தலா 3
பிரிஞ்சி இலை – 2
அன்னாசிப்பூ – ஒன்று
பச்சை மிளகாய் – 4
மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – 4 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை, புதினா (இரண்டும் சேர்த்து) – ஒரு கைப்பிடி அளவு,
தயிர் – அரை கப்
இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
முந்திரி – 8
தேங்காய்ப்பால் – அரை கப்
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
**எப்படிச் செய்வது?**
அரிசியைக் கழுவி, இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊறவிடவும். கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து நறுக்கவும். வெங்காயத்தை மெலிதாக நறுக்கவும். தக்காளியைத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ போட்டு வறுக்கவும். பின்னர் வெங்காயம், கீரை, பச்சை மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது, முந்திரி ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கி தயிர் ஊற்றி, எண்ணெய் பிரியும் வரை குறைந்த தீயில் வதக்கவும். இதில் அரிசியைத் தண்ணீரோடு கலந்து, தேங்காய்ப்பால் ஊற்றி, பனீர் துண்டுகளைச் சேர்க்கவும். குக்கரை மூடி அடுப்பை `சிம்’மில் வைத்திருக்கவும். ஒரு விசில் வந்தவுடன், மிக மிகக் குறைந்த தீயில், 5 நிமிடங்கள் வைத்திருந்து, பின்னர் அடுப்பிலிருந்து இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கிய பின்னர் மூடியைத் திறந்து, மெதுவாகக் கிளறிவிட்டு, தயிர்ப் பச்சடியுடன் சூடாகப் பரிமாறவும்.
**[நேற்றைய ஸ்பெஷல்: வெந்தயக்கீரை பட்டர் நான்](https://minnambalam.com/public/2022/05/09/1/butter-naan)**
.