போட்டி நடத்துவதில் விதிமுறை வரம்புகளை மீறியதற்காக பிசிசிஐக்கு ரூ.52.24 கோடியை அபராதமாக விதித்துள்ளது சிசிஐ.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியை நடத்துவதில், விதிமுறைகளுக்கு எதிரான வகையில் செயல்பட்டதாகக் கூறி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) ரூ.52.24 கோடியை இந்திய போட்டிகள் ஆணையம் (சிசிஐ) அபராதமாக விதித்துள்ளது.
ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் சேனல்களுடன் இணைந்து, ஐபிஎல் தவிர மற்ற போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்காததாகக் கூறி பிசிசிஐக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஐபிஎல் தொடருக்குப் போட்டியாக, வேறு கிரிக்கெட் போட்டிகளை நடத்த பிசிசிஐ அனுமதி மறுக்கக் கூடாது எனவும் கூறியுள்ளது. முன்னதாக, இந்திய போட்டிகள் ஆணையம் கடந்த 2013ஆம் ஆண்டு பிப்ரவரியில் இதே குற்றச்சாட்டில், பிசிசிஐக்கு அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லியைச் சேர்ந்த சுரிந்தர் சிங் பர்மி என்பவரால் இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் முடிவில், கடந்த மூன்றாண்டுகளில் பிசிசிஐயின் விற்றுமுதல் தொகையில் 4.48 சதவிகிதம் சிசிஐக்கு அபராதமாக அளிக்க பிசிசிஐக்கு 44 பக்கங்களைக் கொண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2013-14, 2014-15 மற்றும் 2015-16ஆம் ஆண்டுக்கான பிசிசிஐயின் விற்றுமுதல் தொகை ரூ.1,164 கோடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் மேற்கொண்டு விசாரணை நடத்துமாறு சிசிஐ, தனது விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அறிக்கையானது 2016 மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த அறிக்கையின் முடிவுகள் மற்றும் பிசிசிஐயின் பதில்களைக் கருத்தில்கொண்டதை அடுத்து, தற்போது மீண்டும் இத்தகைய உத்தரவை சிசிஐ பிறப்பித்துள்ளது.�,