வெளியூரைச் சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கொக்கராப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட குமாரபாளையத்தில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் வெளியூரைச் சேர்ந்த 18 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு வருவாய்த் துறையினர் நேற்று முன்தினம் நில அளவீடு செய்தனர். இதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், நேற்று குமாரபாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். வெளியூரைச் சேர்ந்தவர்களுக்கு இந்தப் பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கக் கூடாது என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கோபிநாதம்பட்டி போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
**-ராஜ்**
.