நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வந்தது. இதன் காரணமாக வறண்டு கிடந்த அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசத்தில் 51.60 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 49.88 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து பாசனத்திற்காக 204.75 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சேர்வலாறு அணையின் மொத்த கொள்ளளவு 156 அடி அங்கு தற்போது 63.84 அடி நீர் இருப்பு உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 84.55 அடி நீர் இருப்பு உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் சிவகிரியில் நேற்று லேசான சாரல் மழை பெய்தது. அடவிநயினார் மற்றும் கருப்பா நதி அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை விட்டு, விட்டு பெய்தது. அடவிநயினார் அணை பகுதியில் பெய்து வரும் மழையால் நீர்மட்டம் 39.50 அடியாகவும், கருப்பாநதி நீர்மட்டம் 42.65 அடியாகவும் உயர்ந்துள்ளது.
கோடை மழை பரவலாக பெய்ததால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது. தற்போது அருவிகளில் தண்ணீர் சற்று குறைந்தாலும் அங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் உள்ளது. அனுமதி வழங்கப்பட்ட நாளிலிருந்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் இரவு நேரங்களிலும் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து அங்கு இரவு நேரங்களில் குளிப்பவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
.