வறண்ட குற்றாலம் அருவிகள் – எதிர்பார்ப்பில் மக்கள்!

Published On:

| By admin

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் இன்னும் தென்காசி மாவட்டத்தில் சாரல் மழை பெய்யாததால் குற்றால அருவிகள் வறண்டு காணப்படுகின்றன. அருவிகளுக்கு தண்ணீர் வரத்து எப்போது ஏற்படும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கோடை மழை அதிகமாக பெய்தது. இதனால் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான அணைகளில் நீர் வரத்து அதிகரித்தது.
மாவட்டங்களில் உள்ள குளங்கள், குட்டைகளிலும் நீர் இருப்பு அதிகரித்து காணப்படுகிறது. வழக்கமாக மே மாதத்தில் குளங்கள் வறண்டுவிடும். ஒருசில அணைகளும் கூட கோடை வெப்பத்தால் வறண்டு போகும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வழக்கத்தைவிட அதிகமாக பெய்த கோடை மழையால் நீர் இருப்பு அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணையில் 70 அடிக்கு மேலாக தண்ணீர் இருப்பதால் நேற்று முதல் 600 கனஅடி நீர் கார் சாகுபடிக்காக திறக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் விவசாயப் பணிகளும் தொடங்கி உள்ளது. தென்காசி மாவட்டத்திலும் அணைகளில் ஓரளவு நீர் இருப்பு உள்ளது. அதே நேரத்தில் கிணறுகள், குளங்களில் நீர் உள்ளதால் விவசாயிகள் நெல் விதை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குற்றாலம் அருவிகளில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கடுமையான வெயிலின் காரணமாக அனைத்து அருவிகளும் வறண்டுவிடும். ஆனால் இந்த ஆண்டு அவ்வப்போது பெய்த கோடை மழையால் அருவிகளில் சீசன் காலத்தில் இருப்பது போல தண்ணீர் கொட்டியது. சுற்றுலா பயணிகளும் குடும்பத்துடன் சென்று குளித்து மகிழ்ந்தனர்.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை குறைந்து கடுமையான வெயில் வாட்டி வதைக்க தொடங்கி உள்ளது. இதனால் அருவிகளில் நீர்வரத்து குறைந்து வருகிறது. தற்போது குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வெகுவாக குறைந்தது. இதனால் குறைவான தண்ணீரில் வாளிகளில் தண்ணீரை பிடித்து குளித்தனர். நேற்று. அருவிகள் முழுவதுமாக வறண்டு போய்விட்டது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் இன்னும் தென்காசி மாவட்டத்தில் சாரல் மழை பெய்யாததால் அருவிகள் வறண்டுள்ளது. எனினும் இந்த மாத இறுதியில் மழை பெய்து அருவிகளுக்குத் தண்ணீர் வரத்து ஏற்படும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

**-ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel