uபனிமூட்டம்: சென்னையில் விமான சேவை பாதிப்பு!

Published On:

| By Balaji

சென்னையில் ஏற்பட்ட பனிமூட்டத்தின் காரணமாகக் கடந்த இரு தினங்களாக விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு விமான மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. டெல்லியில் பனிப்பொழிவு பேசு பொருளான நிலையில் தற்போது சென்னையில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. கடந்த இரு தினங்களாகக் காணப்பட்ட பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாகக் காலை வேளையில் விளக்குகளை எரியவிட்டு வாகனத்தை இயக்குகின்றனர் வாகன ஓட்டிகள்.

இந்நிலையில் பனிப்பொழிவின் காரணமாகக் கடந்த இரு தினங்களாகக் காலை நேரங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் நேற்று காலை பனி சூழ்ந்து இருந்ததால் 23 விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன. 5 விமானங்கள் பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு மாற்றிவிடப்பட்டன.

இந்நிலையில், இன்று காலையும் விமானங்கள் புறப்பாடு மற்றும் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. ஓடு பாதைகளில் பனிமூட்டம் இருந்ததால், 5.30 மணிக்குச் சென்னை வர வேண்டிய மஸ்கட் விமானம், 5.55 மணிக்கு வரும் டெல்லி விமானம், மற்றும் 7 மணிக்கு வர வேண்டிய விமானம் என 5 விமானங்கள் ஹைதராபாத், பெங்களூர் ஆகிய விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன. 6e 495, 6e 384, 6e 1201, 9l 565, 6e 0065 என சென்னையிலிருந்து டெல்லி, மும்பை, கொழும்பு ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் 10 விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டுள்ளன.

இந்நிலையில் இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் ஆகிய விமான நிறுவனங்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில், மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்று தெரிவித்துள்ளன.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share