10 மாதங்களுக்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்றத்திலும், மதுரைக் கிளையிலும் நேற்று (பிப்ரவரி 8) முதல் நேரடி விசாரணை தொடங்கியது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் காணொலிக் காட்சி வாயிலாக வழக்குகள் விசாரிக்கப்பட்டன. பின்னர் அரசு அறிவித்த தளர்வுகள் காரணமாக ஒரு சில வழக்குகள் நேரடியாக விசாரிக்கப்பட்டன. பெரும்பாலான வழக்குகள் காணொலி வாயிலாகவே விசாரிக்கப்பட்டன.
10 மாதங்களுக்குப் பிறகு நேற்று முதல் நேரடியாக விசாரணைகள் நடத்த நீதிபதிகள் அடங்கிய நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று (பிப்ரவரி 8) சென்னை உயர் நீதிமன்றத்திலும், மதுரைக் கிளையிலும் நேரடி விசாரணை தொடங்கியது.
ஆனாலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைப்படி சில கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகிறது. இறுதி வழக்கு விசாரணைகள் மட்டும் காலை, மாலை என இரண்டு வேளைகளில் விசாரிக்கப்படும். ஒரு மணி நேரத்துக்கு ஐந்து வழக்குகள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும். மற்ற வழக்குகள் காணொலி மூலமே நடக்கும்.
ஒரு வழக்கில் இரு தரப்பிலும் தலா ஒரு வக்கீல் வீதம் நீதிமன்ற அறையின் பரப்பளவுக்கு ஏற்ப வக்கீல்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆஜராக வந்த வக்கீல்கள் உள்ளிட்ட அனைவரும் முகக் கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உடல் வெப்பத்தை சோதித்த பிறகே அனுமதிக்கப்பட்டார்கள்.
இந்த நிலையில் “உச்ச நீதிமன்றத்திலும் மார்ச் முதல் வாரத்தில் இருந்து நேரடி விசாரணை மீண்டும் தொடங்கப்படலாம்” என்று இந்திய பார் கவுன்சில் (பி.சி.ஐ) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-ராஜ்**�,