கிச்சன் கீர்த்தனா: முடக்கத்தான் கீரை ரசம்

Published On:

| By Balaji

வாழ்க்கைமுறை மாற்றம், மாறிவிட்ட உணவுப்பழக்கம் போன்றவற்றால் இளைஞர்கள், குழந்தைகள்கூட இடுப்புவலி, மூட்டுவலியால் அவதிப்படுவதைக் காணமுடிகிறது. மூட்டுவலிகள் மட்டுமல்லாமல் புதிது புதிதாக வேறு சில நோய்களும்கூட உருவெடுத்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் இந்த முடக்கத்தான் கீரை ரசத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இந்த ரசம் கை கால், மூட்டுவலி, வாத நோய்களுக்கு நல்ல மருந்தாகும்.

என்ன தேவை?

சுத்தம் செய்த முடக்கத்தான் கீரை இலைகள் – 3 கப்

புளி – கொட்டைப்பாக்கு அளவு

தக்காளி – 3 (பொடியாக நறுக்கவும்)

பூண்டு விழுது, மிளகு – சீரகத்தூள் – தலா ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க

கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்

நெய், கறிவேப்பிலை – சிறிதளவு

எப்படிச் செய்வது?

புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டவும். இரண்டு கப் முடக்கத்தான் கீரை இலைகளை தண்ணீர்விட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டி தனியாக வைக்கவும். வாணலியில் நெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் தக்காளி, உப்பு, பூண்டு விழுது, மீதமுள்ள ஒரு கப் இலைகளை சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசல்விட்டு, ஒரு கொதி வந்ததும் மிளகு – சீரகத்தூள், வடிகட்டிய கீரைச்சாறு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

நேற்றைய ரெசிப்பி: திப்பிலி ரசம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel