கூடங்குளம் அணுக்கழிவுகளை வெளியிடத்துக்கு எடுத்துச் செல்லாமல் அதே இடத்தில் பள்ளம் அமைத்து பாதுகாப்பாக வைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதால், அங்கு வசிக்கும் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மற்றும் விவசாய நீரில் கலக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு உலை வளாகத்தில் ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் தலா 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தித் திறன் கொண்ட இரு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. அத்துடன், அதே பகுதியில் கூடுதலாக நான்கு அணு உலைகளை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளும் நடந்து வருகின்றன.
தற்போது செயல்பாட்டில் இருக்கும் முதல் இரு அணு உலைகளிலும் பயன்படுத்தப்படும் யுரேனியத்தில் இருந்து கிடைக்கும் கழிவுகளை எங்கே வைப்பது என்பதில் சிக்கல் நிலவுகிறது. அணுக்கழிவுகளை கர்நாடகாவின் கோலாரில் கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்தின் அடியில் வைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கர்நாடக அரசின் எதிர்ப்பால் அந்த முடிவு கைவிடப்பட்டது.
கூடங்குளம் அணுக்கழிவுகளை வெளியிடத்துக்கு எடுத்துச் செல்லாமல் அதே இடத்தில் பள்ளம் அமைத்து பாதுகாப்பாக வைக்க மத்திய அரசு மற்றும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் ஆகியவை அனுமதி வழங்கிவிட்டன. அதனால் கூடங்குளத்திலேயே அணுக்கழிவுகளை வைக்க அணுசக்தித் துறை ஏற்பாடு செய்யவுள்ளது.
அதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன் உள்ளிட்டோர் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கூடங்குளம் பஞ்சாயத்து உறுப்பினரான தங்கமலர் என்பவரும் அணுக்கழிவுகளை இங்கேயே வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். கூடங்குளம் இரண்டாவது வார்டு உறுப்பினரான அவர் பஞ்சாயத்து தலைவர் வின்சி மலையரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில், “கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் தலா 1,000 மெகாவாட் மின்திறன் கொண்ட ஆறு அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது அணுக்கழிவுகளை நிரந்தரமாகச் சேமிக்க அணுக்கழிவுத் தொட்டிகள் அமைக்கும் பணிகள் நடைபெறுவதாகத் தெரிகிறது.
கூடங்குளம் அணு உலை வளாகத்துக்குள் இதற்காக 10 முதல் 15 மீட்டர் ஆழத்தில் பள்ளம் தோண்டி அதில் பயன்படுத்தப்பட்ட யுரேனியத்தை புதைக்க இருப்பதாகத் தெரிகிறது. அதன் மூலம் அணு கதிர்வீச்சானது மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மற்றும் விவசாய நீரில் கலக்கும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
மக்கள் பயன்படுத்தும் தண்ணீர் மற்றும் விவசாய நிலங்களில் கதிர்வீச்சு கலக்கும்பட்சத்தில் நமது தலைமுறை மிகவும் பாதிக்கப்படும். அதனால் கூடங்குளம் பஞ்சாயத்து மூலம் தீர்மானம் இயற்றி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பி அணுக்கழிவு மையம் அமைவதைத் தடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
**-ராஜ்**
.