ராணிப்பேட்டை அருகேயுள்ள வாலாஜப்பேட்டையில் பனிமூட்டம் காரணமாக 9 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாலாஜப்பேட்டை சுங்கச்சாவடி அருகேயுள்ள மேம்பாலத்தில் இன்று (ஜனவரி 14) வழக்கத்தை விடவும் பனிமூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. அருகில் யார் செல்கிறார்கள், எந்த வாகனம் செய்கிறது என்பதைக்கூட அறிய முடியாத நிலையில் பனிமூட்டம் மிக அடர்த்தியாக இருந்தது. இந்த நிலையில் வேலூரில் இருந்து சென்னை நோக்கி வேகமாக சென்றுக் கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று அந்த மேம்பாலம் வழியாக சென்றுகொண்டிருந்தது. பனிமூட்டத்தால் முன்னே வாகனம் வருவதைப் பார்க்க முடியாத லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கண்டெய்னர் லாரிக்கு பின்னால் வந்து கொண்டிருந்த 2 லாரிகளும், 6 கார்களும் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் படுகாயமடைந்தனர். இதன் காரணமாக சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து அங்கு வந்த போலீசார், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்தச் சம்பவத்தால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.�,