சென்னையில் நேற்று இரவு நடைபெற்ற பொன்னியின் செல்வன் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் இயக்குநர் மணிரத்னம், லைகா நிறுவனர் சுபாஷ்கரண் அல்லி ராஜா ஆகியோரின் நட்புக்குக் கெளரவம் சேர்க்கும் வகையில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் மணிரத்னம் இயக்கத்தில் நடித்திருக்கிறார்கள். அதே போன்று லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்திருக்கிறார்கள்.
இருவரும் இந்த நிகழ்வில் ஏன் கலந்துகொள்கிறார்கள் தெரியுமா என இணையதளங்களில் அவரவர் வசதிக்கு ஏற்ப செய்திகளை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

ஆனால் அந்த யூகங்களை பொய்யாக்கி ” பொன்னியின் செல்வன்” படத்தை பற்றி மட்டுமே இருவரும் பேசி சென்றது குறிப்பிடத்தக்கது,
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் படத்தில் நடித்துள்ள கலைஞர்கள் போன்று முதல் நபராக விழா நடைபெற்ற நேரு உள் விளையாட்டு அரங்கிற்குள் ரஜினிகாந்த் நுழைந்த போது ஒட்டுமொத்த அரங்கில் அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.
இந்த மரியாதை அடுத்து வந்த கமல், ஷங்கர் போன்றவர்களுக்கு கிடைக்கவில்லை. தன்னை வரவேற்ற இயக்குநர் மணிரத்னத்தை சந்தித்து கட்டி அணைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் ரஜினிகாந்த்.

எந்திரன் படத்தில் இணைந்து ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா ராய் ரஜினிகாந்தை பார்த்ததுமே அருகே வந்து அவரது காலில் விழுந்து ஆசி வாங்கினார்.
விழாவில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் குறித்த காணொளி ஒளிபரப்பப்பட்டது. அதன் பிறகு மேடையில் ஒன்றாக நின்று கமலும் ரஜினியும் டிரைலரை வெளியிட்டனர்.
பின்னர் பேசிய நடிகர் ரஜினிகாந்த் ‛‛நம்ம விக்ரம் என்று கூறி விக்ரம் படத்தின் வெற்றிக்காக கமல்ஹாசனைக் கட்டி அணைத்து அரங்கத்தை அதிரவிட்டார். தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த் ‛‛மணிரத்னம் திறமைசாலியான மனிதர்.
ஆரம்பத்தில் சின்ன சின்ன நடிகர்களை வைத்து படம் பண்ணி தனது சினிமா கேரியரை துவங்கியவர். இன்று பெரிய இடத்திற்கு வந்துள்ளார். மும்பையில் இருக்கும் பெரிய ஸ்டார்ஸ் எல்லாம் மணிரத்னத்தைப் பார்த்தால் எழுந்து நிற்பார்கள்.
அந்தகாலத்தில் பார்ட் 1,2 என்றெல்லாம் படம் எடுக்க முடியாது. அதனால் தான் பொன்னியின் செல்வன் நாவலை அப்போது படமாக எடுக்க முடியவில்லை. இப்போது எடுத்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் படத்தில் வரும் நந்தினி கேரக்டர் தான் நான் நடித்த படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி கேரக்டருக்கான இன்ஸ்பிரேசன். அந்தக்காலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பொன்னியின் செல்வனில் வரும் வந்தியத்தேவன் கேரக்டர் யார் பண்ணினால் நன்றாக இருக்கும் என ஒரு பேட்டியில் கேட்டார்கள்.
அதற்கு அவர் ரஜினிகாந்த் என்று கூறினார். அவர் சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது. பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நான் நடிக்கவா என்று மணிரத்னத்திடம் கேட்டேன். உங்கள் ரசிகர்களிடம் என்னால் திட்டு வாங்க முடியாது என்று கூறி அவர் ஒப்புக் கொள்ளவில்லை” என்றவர்,

அதன் பிறகு பேசுகையில், கல்கி பத்திரிகையில் ஒவ்வொரு 15 நாட்களுக்கும் பிரதி வெளியாகும் போது, ஒரு பெரிய படத்தின் First day first show மாதிரி இருக்கும் என்றது பத்திரிகையாளர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியது.
வார இதழாகத்தானே கல்கி அன்றைய காலகட்டத்தில் வந்தது. இதே போன்று வந்தியத்தேவனாக நடிக்க ரஜினிகாந்த் பொருத்தமாக இருப்பார் என ஜெயலலிதா கூறியது உண்மையாக இருக்குமா என்கிற கேள்விகளுடன் அன்றைய காலகட்டத்தில் ஜெயலலிதா வட்டத்துக்குள் நெருக்கமாக இருந்த சில பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, ”ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் விழாவில் ஜெயலலிதா கூறியதாக பேசியது உண்மைதான்” என்றார்கள்.
மேலும் அவர்கள், “இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றது. அது முடியாமல் போனது. ஜெயலலிதா முழு நேர அரசியல் வாதியாக மாறாத சூழ்நிலையில் வாரப் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பது வழக்கம் அன்றைய காலகட்டத்தில் தங்களது திரையுலக இருப்பை உறுதி செய்துகொள்ளவும், பிரபலத்துக்காகவும் அவர்களே செய்தியாளர்களை அழைத்து பேட்டி கொடுப்பது வாடிக்கை மற்ற நடிகைகளிடம் பேட்டி எடுப்பது போன்று ஜெயலலிதாவிடம் முதிர்ச்சியற்றதனமாக கேள்விகள் கேட்டு பேட்டி எடுக்க முடியாது.

ஜெயலலிதா ஆங்கில நாவல்கள் படிப்பதில் ஆர்வம் உள்ளவர். போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் நூலகம் ஒன்றை அவர் பராமரித்து வந்தார். ஆங்கில நூல்கள் தவிர்த்து தமிழ்நாவல்கள் அதிகமாக சேகரித்து வைத்திருந்தார்.
புதிதாக வருகின்ற புத்தகங்களில் படிக்க வேண்டிய நூல்கள் எவை என்பதை மறைந்த பத்திரிகையாளர்கள் சோ ராமசாமி, வலம்புரிஜான் ஆகியோர் அவருக்கு கூறுவது வழக்கம். அப்படி அவர் படித்த நாவல்களில் ஒன்று தான் பொன்னியின் செல்வன்.
அதனை படமாக்க கமல்ஹாசன் முயற்சி செய்துகொண்டிருந்த காலத்தில் அது பற்றிய செய்திகள் வார நாளிதழ்களில் வந்து கொண்டிருந்தன.
அந்த நேரத்தில் ஜெயலலிதாவிடம் பேட்டி எடுத்த செய்தியாளர் அன்றைய சூழலுக்கு ஏற்ப “பொன்னியின் செல்வன்” படம் பற்றி கேள்வி எழுப்பினார். அன்றைய காலகட்டத்தில் ரஜினிகாந்த் முன்னணி நடிகராக வளர்ந்து வந்த நேரம்.
பத்திரிகைகள் விற்பனைக்கு போஸ்டர் முக்கியம் அதனை மனதில் வைத்துதான் ஜெயலலிதாவிடம் இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டது. எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் போன்றவர்களை குறிப்பிடாமல் ரஜினிகாந்த்தை குறிப்பிட்டது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது,
அந்த வார இதழும் விற்று தீர்ந்தது. இந்த பேட்டியை எடுத்தவர் வலம்புரிஜான். பத்திரிகை பெயர் தாய் வார இதழ்” என்றார்கள் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்த பத்திரிகையாளர்கள்.

ஜெயலலிதா விருப்பப்பட்டது வந்தியதேவன் கதாபாத்திரம். ரஜினிகாந்த் தன் வயதை மனதில்கொண்டு மணிரத்தினத்திடம் கேட்டது பழுவேட்டையர் கதாபாத்திரம். ஆனால் இருவரது ஆசையும் நிறைவேறவில்லை என்பது காலத்தின் கட்டாயமோ? சினிமாவில் கதைக்கு யார் தேவை என்பதை காலமும், கதையும் தீர்மானிக்கும் என்பார்கள்.
தயாரித்து நடிக்க விரும்பிய கமல்ஹாசனும், நடிக்க ஆசைப்பட்ட ரஜினிகாந்த்தும் பொன்னியின் செல்வன் பட விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக மட்டுமே கலந்துகொள்ள முடிந்திருக்கிறது.
இராமானுஜம்