சட்டமன்ற உறுப்பினர்களால் தீர்மானிக்கப்பட்டு அனுப்பப்பட்ட நீட் மசோதாவை கிடப்பில் போட்டுள்ள கவர்னர் பதவி தேவையா என்று ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கேள்வி எழுப்பி உள்ளார்.
விழுப்புரம் சட்டக்கல்லூரியில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு எழுதிய ‘நானும் நீதிபதி ஆனேன்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் நீதிபதி சந்துரு, தான் எழுதிய நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது, “ஜெய்பீம் படத்தின் உண்மையான நாயகன் நான் இல்லை. சரியான காலகட்டத்தில் சரியான தீர்ப்பை வழங்கிய நீதிபதி மிஸ்ரா அவர்களே உண்மையான நாயகன். ஆட்கொணர்வு மனு என்பது மனித உரிமை மீறலை தடுப்பது. ஒரு மனிதனுடைய அநீதியை இந்த ஆட்கொணர்வு மனு மூலம் தடுக்க முடியும் என்பதை 25 ஆண்டுகளுக்கு முன்பு மிஸ்ரா அவர்கள் அளித்த தீர்ப்பு உறுதி செய்தது.
1990 முதல் 1995ஆம் ஆண்டு வரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய மிஸ்ரா, செங்கேணி வழக்கு, செஞ்சி ரீட்டா மேரி வழக்கு, அந்தியூர் விஜயா உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்தார். இந்த வெவ்வேறு வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறப்புக் குழு ஒன்றை அமைத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்து இழப்பீடு தொகையையும் பெற்றுக் கொடுத்தார்கள். இதற்கு முழு முக்கிய முதற்காரணம் நீதிபதி மிஸ்ரா. இதில் பல்வேறு நபர்களுக்கு அரசு வேலைவாய்ப்புக் கிடைத்தது. இந்த காலகட்டத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் ஏற்படுத்திய மாற்றம்தான், ஜெய் பீம் படத்தினுடைய விளைவு.
வழக்கறிஞர்கள் எப்போதும் மக்கள் பக்கத்தில் இருக்க வேண்டும். செங்கேணிக்கு கிடைத்த நீதி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். ஜெய்பீம் படத்தில் வந்த சம்பவத்தை விட மோசமான சம்பவம் விழுப்புரம் அருகே உள்ள சித்தலிங்கமடம் பகுதியில் நடைபெற்றது. நான்கு இருளர் பெண்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டு காவல் நிலையத்தில் சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர். ஒரு திரைப்படத்தால் மட்டும் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடாது. மனித உரிமை மீறல்களை எதிர்த்து வாதாட வழக்கறிஞர்கள் முன்வர வேண்டும்” என்று பேசியவர் தொடர்ந்து…
“இன்றைய சூழ்நிலையில் நீதிபதிகளின் சர்வாதிகாரப் போக்கை நாம் காண்கிறோம். அந்த போக்கைச் சரிவர கொண்டு செல்வதற்கு சட்ட மாணவர்களின் விமர்சனம் கண்டிப்பாக தேவை. சட்டக் கல்லூரிக்கும், அரசியலுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை. சட்டத்தின் ஒரு பகுதிதான் அரசியல்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் உருவாக்கிய ஓர் மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால், ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் ஆளுநரின் பதவி தேவையா என்ற கேள்வியும் மாநில அரசின் அதிகார வரையறை என்ன என்ற கேள்வியும் வருகிறது.
இது போன்று தினம் தினம் ஒவ்வொரு பிரச்சினைகள் விவாதத்துக்கு வருகின்றன. தினசரி வருகின்ற இதுபோன்ற பிரச்சினைகளை சட்டக்கல்லூரி மாணவர்கள் விவாதிக்க வேண்டும். ஏதோ அரசியல்வாதிகள் மற்றும் இரண்டு கட்சிகளுக்கு இடையில் உள்ள பிரச்சினை என்று இதைப் பார்க்காமல் ஒவ்வொரு குடிமக்களையும் பாதிக்கக்கூடிய பிரச்சினை என்று பார்க்க வேண்டும். ஒவ்வொரு பிரச்சினைக்கும் நமக்குத் தொடர்பு உள்ளது. நாம் மௌனமாக இருந்தால் இந்த நாடு ஒரு சோசலிச, மதசார்பற்ற, இறையாண்மை பெற்ற குடியரசு நாடாக இருக்க முடியாது. மக்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டம்தான் இந்த அரசியலமைப்பு சட்டம். நமது திறமை மற்றும் அறிவு அனைத்தும் பொது மக்களுக்குப் பயன்பட வேண்டும்” என்று உரையாற்றினார்.
**-ராஜ்-**
.