தள்ளுபடி செய்யப்பட்ட ராகுல்காந்தி மனு: அடுத்தது என்ன?

Published On:

| By christopher

2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடைகோரி ராகுல்காந்தி செய்த மேல்முறையீட்டு மனுவை, சூரத் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி என்ற பெயர் குறித்து பேசியதற்காக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது சூரத் நீதிமன்றம்.

மேலும் தண்டனையை முன்னிட்டு எம்.பி பதவியில் இருந்தும் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடைகோரி ராகுல்காந்தி சூரத் செசன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இதில் தண்டனை தடைவிதிக்கப்பட்டால் மீண்டும் அவருக்கு எம்.பி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சூரத் செசன்ஸ் நீதிமன்றம் ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு மனுவை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

எனினும் ராகுல்காந்தி தனது எம்.பி பதவியை திரும்ப பெறுவதற்கு சட்டப்பூர்வமாக இன்னும் வாய்ப்புகள் உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து ராகுல்காந்தியின் தரப்பில், சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது.

ஒருவேளை அங்கேயும் மேல்முறையீடு மனு நிராகரிக்கப்பட்டால், ராகுல்காந்தியின் தரப்பில் உச்சநீதிமன்றத்தையும் நாட அதிகளவில் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள செய்தியில், “சட்டத்தின் கீழ் எங்களுக்கு இருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் தொடர்ந்து பயன்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி பத்திரிகையாளர்களை சந்திப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

தமிழ் பாடப்புத்தகத்தில் கருணாநிதி

ராகுல்காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share