அதிமுக யாருக்கும் அடிமை கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 30) செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், காவிரி நீர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது,
அதற்கு பதிலளித்த அவர், “50 ஆண்டுக்கால காவிரி நீர் பிரச்சனைக்கு அதிமுக ஆட்சியில் தான் தீர்வு காணப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் முழுமையான தீர்ப்பை பெற்று மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று உத்தரவை பெற்றுத் தந்தது அதிமுக அரசு.
அதுமட்டுமில்லாமல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கு கால தாமதம் செய்ததால் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 நாட்கள் நாடாளுமன்றம் முடங்குவதற்கு காரணமாக இருந்தார்கள். இன்றைக்கு 20 மாவட்டத்திற்கு நீர் ஆதாரமாக இருப்பது காவிரி நதி நீர்.
இன்றைக்கு இந்தியா என்ற ஒரு கூட்டணியை அமைத்திருக்கிறார்கள். இந்த கூட்டணியின் நோக்கம் என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள். மக்களுக்கு நன்மை செய்வதற்கு தானே இந்த கூட்டணி என்று சொல்கிறார்கள். தமிழ்நாட்டையே காப்பாற்ற முடியவில்லை. இவர் (முதல்வர் ஸ்டாலின்) போய் இந்தியாவை காப்பாற்ற போகிறாராம். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம் என்கிற கதையாக இருக்கிறது.
பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டணி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட போது கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வரவேற்கிறார். அப்போது தமிழ்நாட்டு பிரச்சனையை பேசினா தப்பா?
நாட்டு மக்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு தானே கூட்டணி அமைத்திருக்கிறீர்கள். தமிழ்நாட்டின் பிரச்சனை பிரதான பிரச்சனையாக இருக்கிறது. காவிரி நீர் பிரச்சனை இன்றைக்கு நேற்று இல்லை. 50 ஆண்டு காலம் விவசாயிகளும் அரசாங்கமும் போராடிக் கொண்டிருக்கிறது. அப்படி போராடிப் பெற்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று சொல்வதற்கு முதலமைச்சர் தயங்குகிறார். இதையெல்லாம் கேள்வி கேட்டால் ஏதேதோ பேசி அதிமுக அடிமை என்று சொல்வார்.
அதிமுக எந்த கட்சிக்கும் எப்போதும் அடிமை கிடையாது. திமுகதான் எப்போதும் அடிமையாக இருக்கின்றது. திமுகவை பொறுத்தவரை குடும்பத்தை சேர்ந்தவர்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பது தான் அவர்களுடைய எண்ணம். அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் குறித்த கவலையே கிடையாது.
முதலமைச்சர் பெங்களூரு சென்ற போது கர்நாடக அமைச்சரிடம் பேசி நீரை பெற்றுத் தந்திருந்தால் உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் மீதும் விவசாயிகள் மீதும் அக்கறை கொண்ட முதல்வர் என்று மக்கள் பாராட்டியிருப்பார்கள்.
நானும் டெல்டாகாரன் என்று வீர வசனம் பேசுவதற்கு நன்றாக தான் இருக்கிறது. ஆனால் டெல்டாவில் குறுவை சாகுபடி பயிர்கள் எல்லாம் கருகிக் கொண்டிருக்கிறதே, அதற்கு என்ன தீர்வு கண்டீர்கள்” என்றார்.
தொடர்ந்து அதிமுக – பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு, “பாஜக தீண்ட தகாத கட்சியா. 1999-ல் இதே பாஜகவுடன் திமுக கூட்டணியில் இருந்ததா இல்லையா? வெற்றி பெற்று அமைச்சர்கள் இடம் பெற்றார்களா இல்லையா? இலாகா இல்லாத அமைச்சராக முரசொலி மாறன் ஒரு வருடம் அமைச்சர் பதவியை அனுபவித்தீர்களா இல்லையா?. அப்போதெல்லாம் பாஜக இனித்தது, இப்போது கசக்கிறதா?
அரசியலில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி வைப்பார்கள். கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது வேறு” என்று தெரிவித்தார்.
மோனிஷா
கொடநாடு வழக்கு: எடப்பாடி எழுப்பும் கேள்விகள்!
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: உயர்நீதிமன்றத்தை அணுக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!