தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
மாநாட்டுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் தவெக தலைவர் விஜய், கட்சி நிர்வாகிகளுக்கு இன்று (அக்டோபர் 20) கடிதம் எழுதியுள்ளார்.
அதில் குறிப்பாக, கர்ப்பிணி பெண்கள், பள்ளியில் படிக்கும் சிறுவர், சிறுமியர், நீண்டகாலமாக உடல்நலமின்றி இருப்பவர்கள், முதியவர்கள் மாநாட்டிற்கு வரவேண்டாம் என்று விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விஜய்யின் முதல் மாநாடு தொடர்பாக தொடர்ச்சியாக நாம் செய்திகள் வெளியிட்டு வருகிறோம். கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி மாநாடு நடைபெறும் இடத்திற்கு நேரடியாக விசிட் செய்து செய்தி வெளியிட்டிருந்தோம்.
அந்த செய்தியில், “மாநாடு நடைபெறும் இடத்திற்கு மத்தியில் பெரிய கிணறு ஒன்று இருக்கிறது. தலைவர்கள் அமரும் மேடைக்கு பின்னால் ரயில்வே டிராக் இருக்கிறது.
மாநாடு நடைபெறும் இடத்திற்கு மேலே சுமார் 700 மீட்டர் தூரத்திற்கு மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதை சரிசெய்ய நிர்வாகிகள் ஆலோசித்து வருகிறார்கள்” என்று தெரிவித்திருந்தோம்.
அதேபோல அக்டோபர் 16 அன்று , விஜய் மாநாட்டு பணிகள் மந்தமாக நடப்பதற்கு பொருளாதார தடை இருப்பதாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனக்கு நெருக்கமானவர்களுடன் தெரிவித்ததை நாம் பதிவு செய்திருந்தோம்.
இந்தநிலையில், கடந்த இரண்டு நாட்களாக மாநாட்டு பணிகள் வேகமெடுத்துள்ளது.
மாநாடு நடைபெறும் இடத்தை நாம் பார்த்தபோது, “மாநாடு நடுவில் உள்ள கிணறு முழுமையாக மூடப்பட்டு, கிணற்றைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல மாநாட்டு மேடைக்கு பின்னால் உள்ள ரயில்வே டிராக் பகுதிக்கு மாநாட்டுக்கு வரும் மக்கள் போகாத அளவுக்கு பெரிய தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. மாநாடு நடைபெறும் இடத்திற்கு மேலே செல்லும் மின் கம்பிகள் 600 மீட்டர் தூரத்திற்கு துண்டிக்கப்பட்டுள்ளது.
மாநாடு வேலைகளை வேகப்படுத்த பொருளாதாரத்தை கையாளும் குழுவிற்கு விஜய் போதுமான அளவுக்கு நிதி கொடுத்திருக்கிறார். இதனால் மாநாட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
மாநாடு நுழைவு வாயிலில் இருந்து மேடை வரையில் நடுவில் ஆறு அடி அகலத்திற்கு மூன்று அடி உயரத்தில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இருபக்கமும் அமரக்கூடிய தொண்டர்களை அந்த பாதையில் சென்று சந்தித்து உற்சாகப்படுத்த இருக்கிறார் விஜய்.
மாநாடு அருகிலேயே மருத்துவ முகாம்களை அமைக்க திட்டமிட்டு வருகிறார்கள். அதேபோல, உணவு பொருள்களை மாநாட்டுக்கு வருபவர்களின் இருக்கையில் வழங்கலாமா அல்லது வெவ்வேறு இடங்களில் ஃபுட் கோர்ட் அமைத்து வழங்கலாமா என்றும் ஆலோசித்து வருகின்றனர்.
கார் பார்க்கிங் பகுதியில் அதிகளவில் இருந்த புற்கள், செடிகளை களைக்கொல்லி மருந்துகள் அடித்து அகற்றி அழித்துள்ளனர். தரையில் சேறும் சகதியாக இருக்கிறது. இருந்தாலும் சில தினங்களில் தரை உலர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் கார் பார்க்கிங்கிற்கு செல்லக்கூடிய பாதையில் கிராவல் கொட்டி சாலை அமைத்து வருகிறார்கள்
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு மாநாடு பிரச்சார விளம்பர வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளது. மாநாடு முகப்பில் நிரந்தரமாக கொடிக்கம்பத்தை நிறுத்த நில உரிமையாளர்களிடம் இருந்து ஐந்து வருடத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் 100 அடி உயரத்திற்கு கொடிக்கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநாடு மேடைக்கு விஜய் கார் செல்வதற்கு தனி சாலை ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேடைக்கு பின்னால் மூன்று கேரவன் வேன் நிறுத்தவும், மாநாடு சவுண்ட் சர்வீஸ், லைட் வசதிகளுக்கு ஜெனரேட்டர்களை ஏற்பாடு செய்துள்ளனர். தற்போது மாநாட்டு பணிகளில் 200-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகிறார்கள்” என்கிறார்கள்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உளுந்து விதைகளில் கலப்படம்… விவசாயிகள் புகார்! நடவடிக்கை எடுப்பாரா எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்?
ஆசிரியர் பணி நியமனங்களை நிறுத்தி வைத்திருப்பது ஏன்? – அன்புமணி கேள்வி!