தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 71 வது பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு பிரதமர் மோடி முதல் நாட்டின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். திமுக தொண்டர்கள் இன்று அறிவாலயத்தில் திரண்டு தங்கள் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மிகச் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய்யும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.
தனது எக்ஸ் பதிவில் விஜய், ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், கடந்த நவம்பர் 27ஆம் தேதி திமுகவின் இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது நடிகர் விஜய் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட நன்றி அறிக்கையில் வாழ்த்தியவர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தார். அதில் விஜய் பெயர் இடம் பெற்றிருக்கவில்லை.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்திருப்பது முக்கியமாக விவாதிக்கப்படுகிறது.
இது குறித்து விஜய் வட்டாரத்தில் நாம் விசாரித்த போது, “மற்றவர்கள் எல்லாம் அரசியல் கட்சித் தலைவர்கள். ஆனால் ஸ்டாலின் தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர். அந்த வகையில் எந்தவித உள்நோக்கம் இன்றி விஜய் தமிழனாக தமிழ்நாட்டின் முதல்வரை வாழ்த்தியிருக்கிறார், அவ்வளவுதான். இதில் வேறு ஏதுமில்லை” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேந்தன்