288 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில், வரும் நவம்பர் 20-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மகாராஷ்டிரா அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியான பாஜக, சிவசேனா ( ஷிண்டே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (அஜித்பவார் பிரிவு) கட்சிகளிடையே கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் பேச்சுவார்த்தை முடிந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதேவேளையில், காங்கிரஸ், சிவசேனா ( உத்தவ்தாக்கரே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் ( சரத்பவார் பிரிவு) கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்தநிலையில், மகாராஷ்டிரா தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி 10 இடங்களில் போட்டியிடுகிறது.
இதுதொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற பொது தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பத்து தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி பத்து தொகுதிகளிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. ஏனைய மற்றத் தொகுதிகளில் இந்தியா கூட்டணியை ஆதரிக்கிறோம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கங்காபூர், பத்நாபூர், நன்டெட் (தெற்கு), ஹிங்கோலி, கல்மனுரி, வாஸ்மாட், தெக்லூர், அவுரங்காபாத் (மையம்), முள்ளன்ட் ( மும்பை), கன்னட் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி பிவாண்டி ,மலேகோன், வாசிம், அவுரங்காபாத் (மேற்கு), அவுரங்காபாத் (கிழக்கு), புலம்பிரி, மும்பை மலாட், தாராவி, போக்கர்டன் ஜல்னா, துலே ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலங்கானா மாநிலங்களில் விசிக போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…