துரைமுருகனை தொடர்பு கொண்ட வைகோ… வைகோவுக்கு எடப்பாடி தூது!

Published On:

| By christopher

Edapadi messenger to Vaiko

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைக்காக பிப்ரவரி 29ஆம் தேதி அறிவாலயம் சென்ற மதிமுக குழுவினர், உடன்பாடு ஏதும் எட்டப்படாமல் திரும்பி வந்தனர்.

அறிவாலய வளாகத்தில் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பேச்சுவார்த்தை குழு தலைவரான கட்சியின் அவை தலைவர் ஆடிட்டர் அர்ஜுன்ராஜ், “நாங்கள் ஒரு மக்களவைத் தொகுதி ஒரு மாநிலங்களவை இடம் கேட்டிருக்கிறோம். எங்கள் சொந்த சின்னத்தில் தான் போட்டியிடுவோம். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எப்போது என்று அவர்கள் தெரிவிக்கவில்லை” என்று கூறினார்.

மதிமுக தரப்பில் ஒரு மாநிலங்களவை எம்.பி. வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட… திமுகவோ அதை மாநிலங்களவை தேர்தல் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டது.

ஆனால் மதிமுக தரப்பிலோ, ‘கூட்டணி கட்சிகளுக்கு 2019ல் என்ன கொடுக்கப்பட்டதோ அதையே மீண்டும் இப்போது கொடுப்பதாக சொல்கிறீர்கள். அப்படி பார்த்தால் 2019ல் எங்களுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும் ஒரு மாநிலங்களவை இடமும் தானே கொடுத்தீர்கள். அதை மீண்டும் கொடுங்கள்” என்று வலியுறுத்தி விட்டு வந்திருக்கிறார்கள்.

இதன் பிறகு மார்ச் 1ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

அதற்குப் பிறகு மார்ச் 2 ஆம் தேதி காலை அறிவாலயத்தில் மனிதநேய மக்கள் கட்சியும் தமிழக வாழ்வுரிமை கட்சியும் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினரை சந்தித்தனர்.

இது மதிமுக நிர்வாகிகளை குழப்பத்தில் ஆழ்த்தியது. ஒரு இடத்தை நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லை என்றால் அதில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு மனிதநேய மக்கள் கட்சியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் தயாராக இருக்கின்றன என்பதை மதிமுகவுக்கு எடுத்துக்காட்டுவதற்கு தான் அந்தக் கட்சி நிர்வாகிகள் அழைக்கப்பட்டனர் என்று மதிமுக வட்டாரத்தில் பேசத் தொடங்கினார்கள்.

பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு மூன்று நாட்கள் முழுதாக கடந்துவிட்ட நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் அடுத்த கட்ட முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்த சூழ்நிலையில் மிகவும் இறுக்கமாக இருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது நண்பரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனை தொடர்பு கொண்டு தனது வருத்தத்தை பதிவு செய்ததாக தாயக வட்டாரத்திலே கிசுகிசுகிறார்கள்.

இதே நேரம் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள நிலை பற்றி உணர்ந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி… ஒரு சில பொதுவான நண்பர்கள் மூலம் வைகோ தரப்புக்கு தூதுவிட்டு இருப்பதாக அதிமுக வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.

“நாங்கள் பாரதிய ஜனதாவை விட்டு விலகி வந்து விட்டோம். அம்மா உங்களை தனது சொந்த அண்ணனாக பாவித்தார். அப்படிப்பட்ட நீங்கள் அதிமுக கூட்டணிக்கு எப்போதும் வரலாம். உங்கள் வருகை இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டும் அல்ல அடுத்த வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கும் மதிமுக எழுச்சியும் அங்கீகாரமும் பெறுவதற்கு சாதகமாக இருக்கும்” என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருந்து வைகோவுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையே மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் பெறுவது தொடர்பாக தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என்று நாடியிருக்கும் வைகோ தனது டெல்லி நண்பர்கள் மூலமாகவும் பம்பரம் சின்னத்தை பெறுவதற்கு தீவிர முயற்சியில் இருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-வேந்தன்

ஹெல்த் டிப்ஸ்: ஜிம்முக்கு செல்லாமல் எடையைக் குறைக்கலாம்!

தமிழ்நாட்டு அரசியல் வானம் தி.மு.க! மேகங்கள் கலையலாம், வானம் மறையுமா?

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

பியூட்டி டிப்ஸ்: நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற நெயில் பாலிஷ் எது?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel