கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்’ என்று உதயநிதி உள்ளிட்ட பலரும் வாக்குறுதியளித்தனர். அதை இப்போது வரை எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று (ஆகஸ்டு 13) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்பி திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்தபோது, “மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிச்சயம் விலக்கு அளிக்கப்படும்” என்று கூறியிருக்கிறார்.
நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு என்றைக்கும் ஒப்புதல் அளிக்க மாட்டேன் என்று நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருந்த நிலையிலும், நாடாளுமன்றக் கூட்டம் முடிந்த நிலையிலும் இன்று செய்தியாளர்களிடம் பேசினார் திருச்சி சிவா.
“நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பதினாறு நாட்கள் நடைபெற்று முடிந்திருக்கின்றது. ஆக்கபூர்வமான பணிகளும் விவாதங்களும் அங்கு நடைபெறவில்லை.
இரண்டு அவைகளிலும் ஒன்றிய அரசு கொண்டு வந்த மாநில உரிமைகளை தடைசெய்யும் மசோதாக்களுக்கு நான், டி. ஆர். பாலு, தயாநிதிமாறன் , கனிமொழி ஆகியோர் எதிர்த்து பேசினோம்.
மணிப்பூர் பிரச்சனை நடைபெற்று வரும் சூழ்நிலையில் வேறு முக்கியமான மசோதாக்களை கொண்டு வந்து மணிப்பூர் பிரச்சினையை திசை திருப்பும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டது.
நூறு நாட்களுக்கும் மேலாக மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் நடைபெற்று வருகிறது இக்கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
குழந்தைகள் , பெண்கள் என 230 நபர்கள் மியன்மார் எல்லையில் இருக்கும் காடுகளுக்கு தப்பி சென்றுள்ளனர். அவர்கள் கொண்டு சென்ற அரிசி மற்றும் வேறு உணவு பொருட்கள் எத்தனை நாட்கள் போதுமானதாக இருக்கும் என்பது தெரியவில்லை அவர்களின் தற்போதைய நிலை என்ன என்பதும் தெரியவில்லை.
பிரதமர் இரண்டு மணி நேரம் 10 நிமிடம் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அதில் முதல் ஒன்றரை மணி நேரம் மணிப்பூர் மாநிலம் குறித்து வாய் திறக்கவில்லை. பிரதமர் மணிப்பூர் மாநிலம் குறித்து ஒன்றரை மணி நேரத்தில் பேசவில்லை என கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தோம்.
நாங்கள் வெளியே சென்ற பிறகு கடைசியாக 2 நிமிடங்கள் மட்டும் மணிப்பூர் மாநில கலவரத்திற்கு காரணமானவர்களும் தவறு செய்தவர்களும் தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் பேசினார். கிட்டதட்ட 100 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. எப்போது நடவடிக்கை எடுக்க போகிறார் என்ற எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை” என்று விவரித்தார் திருச்சி சிவா.
மேலும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் 89 ஆம் ஆண்டு ஜெயலலிதா அவமதிக்கப்பட்டார் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது பற்றிய கேள்விக்கும் பதிலளித்தார் திருச்சி சிவா.
“நிர்மலா சீதாராமன் 1991 ஆம் ஆண்டு தான் லண்டனில் இருந்து இந்தியாவிற்கு வருகை தந்தார். ஆனால் 1989 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் நடந்ததை நேரில் பார்த்தது போல் பேசியுள்ளார். அமைச்சர் நிர்மலா சீதாராமன் அன்றைய தினம் இந்தியாவிலேயே இல்லாத போது அதை நேரில் கண்டது போல் பேசி இருப்பது விசித்திரமானது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகுதான் எடப்பாடி பழனிச்சாமி என்ற ஒரு அமைச்சர் இருப்பதே வெளியில் தெரிய வந்தது. அதுவரை அமைச்சரவை புகைப்படங்களில் கூட ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருப்பார்.
அன்றைய சட்டமன்ற நிகழ்வின்போது ஜெயலலிதாவிற்கு என்ன ஆனது என்பது குறித்து அன்றைக்கு அவரது அருகில் இருந்த இன்றைய காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் அவர்களும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அவர்களும் தெளிவாக தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு மட்டுமே அன்றைக்கு என்ன நடந்தது என்பது தெரியும். அரசியலுக்காக பழைய பிரச்சனைகளை எடுத்து மீண்டும் பேசுகின்றனர். அனைத்தும் ஒரு 6 மாதங்களுக்கு மட்டும்தான் அதன் பிறகு தேர்தல் வரும் நிச்சயம் காலம் மாறும்” என்றார் திருச்சி சிவா.
நீட் மசோதா குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு பதிலளித்த திருச்சி சிவா,
“ஆளுநர் இன்றைக்கு நேற்று மட்டுமில்லை எப்போதும் முன்னுக்கு பின் முரணாக பேசிவருகிறார். ’இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வில் இருந்து நிச்சயம் விலக்கு அளிக்கப்படும்” என்று கூறினார்.