சத்தீஸ்கரின் புதிய முதல்வராக விஷ்ணு தியோ சாயை பாஜக தேர்வு செய்துள்ளது.
சத்தீஸ்கரில் 2003 முதல் 2018ஆம் ஆண்டு 15 ஆண்டுக்காலம் பாஜக ஆட்சியிலிருந்தது. 2018ல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்து பூபேஷ் பாகல் முதல்வராக இருந்தார்.
இந்நிலையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தது. 54 இடங்களில் வெற்றி பெற்றது. டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டாலும், முதல்வர் யார் என்று பாஜக தலைமை அறிவிக்காமலே இருந்தது.
சத்தீஸ்கரை பொறுத்தவரை முன்னாள் முதல்வர் ராமன் சிங், சத்தீஸ்கர் மாநிலத்தின் பாஜக முன்னாள் தலைவர் விஷ்ணு தேவ் சாய், மத்திய அமைச்சராக இருந்த ரேணுகா சிங் ஆகிய மூவரில் ஒருவருக்கு முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 10) ராய்ப்பூரில் 54 பாஜக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் முடிவில் பழங்குடியினத் தலைவரான விஷ்ணு தியோ சாய் சட்டமன்ற குழு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
குங்குரி தொகுதியில் போட்டியிட்ட விஷ்ணு தியோ சாய், 87,604 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். பிரதமர் மோடியின் முதல் அமைச்சரவையில் எஃகு துறை இணை அமைச்சராக இருந்தார்.
16ஆவது மக்களவையில் ராய்ப்பூர் எம்.பி.யாக இருந்தார். சத்தீஸ்கர் மாநில பாஜக தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்த விஷ்ணு தியோ சாய், “பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளை சத்தீஸ்கர் மக்களுக்காக செயல்படுத்த முழுமனதுடன் பாடுபடுவேன். 18 லட்சம் பேருக்கு வீடுகள் வழங்குவதுதான் முதல் வேலை” என்று தெரிவித்தார்.
விஷ்ணு தியோ சாய்க்கு முன்னாள் முதல்வர் ராமன் சிங், ரேணுகா சிங் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சி.எம். சொன்னா என்ன ஹெச்.எம். சொல்லட்டும்: அப்டேட் குமாரு
நான்கு பெரிய தோல்விகள்: தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தொடர்வாரா?