சென்னையில் போக்குவரத்து மாற்றம்!
ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி இன்று டிசம்பர் 31 இரவு 10 மணி முதல் ஜனவரி 1காலை 6 மணி வரை மேம்பாலங்கள் மூடப்படும் என்று சென்னை போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா!
திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளிவிழாச் சிறப்பு மலர் வெளியீடு, திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். முன்னதாக குமரியில் நேற்று திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறைக்கு இடையே அமைக்கப்பட்ட கண்ணாடி கூண்டு பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
வருமான வரி செலுத்த கடைசி தேதி!
வருமான வரி கணக்கை அபராதத்துடன் தாக்கல் செய்ய இன்றே (டிசம்பர் 31) கடைசி நாள் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலையில் இரண்டாவது நாளாக விசாரணை!
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இரண்டாவது நாளாக இன்றும் தேசிய மகளிர் உரிமை ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி தலைமையில் விசாரணை நடைபெறவுள்ளது.
வண்டலூர் பூங்கா செயல்படும்!
வழக்கமாக பராமரிப்பு பணி காரணமாக செவ்வாய்கிழமை வண்டலூர் பூங்காவுக்கு விடுமுறை விடப்படும் நிலையில், விடுமுறையொட்டி பூங்கா இன்று செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் புத்தாண்டை வரவேற்கும் நாடு!
உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு புத்தாண்டு பிறக்கும். இதையொட்டி கண்ணை கவரும் வகையில் வான வேடிக்கை நிகழ்ச்சிகளுடன் அந்நாட்டு மக்கள் புத்தாண்டை வரவேற்பார்கள்.
வானிலை நிலவரம்!
இன்று, தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-60!
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் நேற்றிரவு 10.15 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது. இந்தநிலையில் ராக்கெட் செயற்கைக்கோள்களைச் சரியான சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியுள்ளது என்று இஸ்ரோ கூறியுள்ளது.
மின் ஊழியர்கள் போராட்டம்!
நாடு முழுவதும் உள்ள மின்துறையைப் படிப்படியாக தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக கூறி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் இன்று நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
2025 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள், பரிகாரங்கள் : மிதுனம்!
2025 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள், பரிகாரங்கள் : ரிஷபம்!
2025 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள், பரிகாரங்கள் : மேஷம்!
லைசென்ஸ் வச்சுருக்கேன்: டிடிஎப் வாசன் வீட்டில் வெளிநாட்டு பாம்பு… எப்படி வந்தது?
மாணவி பாலியல் வன்கொடுமை: அதிமுக போராட்டம்… காவல்துறை ஆக்ஷன்!