தமிழக சட்டப்பேரவை கடந்த 6ஆம் தேதி தொடங்கி இன்று (ஜனவரி 11) நிறைவடைந்தது.
இந்நிலையில் அதிமுக மா.செ.க்கள் கூட்டத்துக்காக கட்சி அலுவலகத்துக்கு வந்த அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “ஆளுநர் வாசிக்காத உரை, சட்டப்பேரவை தலைவர் வாசித்த உரைக்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு கருத்துகளை பதிய வைத்துள்ளார்.
2021இல் திமுக அளித்த வாக்குறுதிகளில் 20 சதவிகிதம் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் மீது பேசும்போது சில அறிவிப்புகளை சுட்டிக்காட்டினேன்.
திமுகவின் 565 வாக்குறுதிகளில் முக்கியமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அதில் ஒன்று தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தரப்படும் என்பதாகும்.
நான்காண்டு கால திமுக ஆட்சி முடிந்துவிட்ட நிலையில் நீட் தேர்வு எப்போது ரத்து செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் நான் கேள்வி எழுப்பினேன்.
இதற்கு முதல்வர் ஸ்டாலின், எங்களிடத்தில் ஒன்றும் இல்லை. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. மத்திய அரசு நினைத்தால் தான் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுவிட்டார். நீட் தேர்வு விவகாரத்தில் ஸ்டாலின் கையை விரித்து விட்டார்.
2021 சட்டமன்ற தேர்தலின் போது இளைஞர்களை,பெற்றோர்களை, நாட்டு மக்களை ஏமாற்றி கவர்ச்சிகரமாக பேசி வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைந்த பிறகு தற்போது எங்களால் நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது என்று அறிவித்துவிட்டார்.
நாங்கள் அப்போதே சொன்னோம்… மத்திய அரசு நினைத்தால் தான் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என்றோம். அப்போதெல்லாம் எங்களை ஏளனமாக பேசிய முதல்வர் ஸ்டாலின், இப்போது அவரே நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்.
இதுதான் திமுகவின் இரட்டை வேடம். நேற்று சட்டமன்றத்தில் நான் பேசியதற்கு எல்லாம் பதில் கொடுக்கவில்லை.
அதோடு விலைவாசி எல்லாம் கூடிவிட்டது. ஏழைகள் படும் கஷ்டத்தை இந்த அரசு கண்டுகொள்ளவில்லை.
2021 ஆம் ஆண்டு கிலோ 35 ரூபாயிலிருந்து 45 வரை பல்வேறு வகையான அரிசிகள் விற்பனை செய்யப்பட்டன.
இன்றைய தினம் 70 ரூபாயிலிருந்து 85 ரூபாய் வரை ரகத்துக்கு ஏற்றவாறு அரிசி விலை உயர்ந்திருக்கிறது.
எண்ணெய் , பருப்பு, பூண்டு ஆகியவற்றின் விலை உயர்ந்திருக்கிறது. இதையெல்லாம் சுட்டிக்காட்டினேன். இதற்கும் பதில் சொல்லவில்லை.
நகரப் பேருந்துகளை பார்த்தால் ஸ்டாலின் பஸ் என்று சொல்வதாக அவர் சொல்கிறார். உண்மையில் அதை ஒப்புக்கொள்ள வேண்டும் தான். ஓட்டை, உடைசல் பேருந்துகள் எல்லாம் ஸ்டாலின் பேருந்துகள்தான். பொருத்தமான பெயரைதான் வைத்திருக்கிறார்கள்
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கண்டமான பேருந்தை வைத்து தான் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். மழை பெய்தால் குடை பிடித்து தான் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. சரியான டயர், பேட்டரி இல்லாமல் மிக மோசமாக இயக்கப்படுகிறது.
போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு இதுவரை பண பலன் வழங்கப்படவில்லை. ஒரு லட்சத்துக்கும் மேலான தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
பேருந்துகளில் எல்லாம் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கிறார்கள் என்று சொல்கிறார். ஆனால் அனைத்து நகர பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று சொல்லிவிட்டு, தேர்தலில் வெற்றி பெற்ற பின் பேருந்துகளுக்கு முன்பும் பின்பும் லிப்ஸ்டிக் அடித்து அந்த பேருந்துகளில்தான் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்று சொல்லிவிட்டார்.
இதுதான் திமுக அரசின் சாதனை. எல்லாவற்றுக்கும் மேலாக மாதம்தோறும் 1000 ரூபாய் கொடுக்கிறேன் என்கிறார். வருவாய் மூலம் இதை கொடுத்தால் பரவாயில்லை. கடன் வாங்கி கொடுக்கிறார்.
இப்படியே கடன் வாங்கிக் கொண்டிருந்தால் இதை எப்படி திருப்பி செலுத்துவது? இதைக் கேட்டாலும் பதில் இல்லை.
கடன் வாங்கி மக்களுக்கு பணம் கொடுப்பது ஒரு பெரிய விஷயம் இல்லை.
2021 அதிமுக ஆட்சியில், இருக்கின்ற வருவாயை காட்டிலும் 2024-25 ஆம் ஆண்டில் 1,10,894 கோடி வருவாய் வந்திருக்கிறது. அப்படி இருக்கும்போது எதற்கு கடன் வாங்கி பணம் கொடுக்கிறீர்கள். இந்த பணம் எல்லாம் எங்கே செல்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்து இந்த நான்கு ஆண்டுகளில், 3,53,394 கோடி கடன் வாங்கி விட்டார்கள். ஒரு பக்கம் வருவாயும் வருகிறது. இன்னொரு பக்கம் கடனும் வாங்குகிறார்கள்.
இவை இரண்டும் சேர்த்தால் 4,64,288 கோடி ரூபாய் வருகிறது. ஆனால் என்ன புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள்.
2021 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் மூலதன செலவு கூடுதலாக 17,000 கோடி தான் செய்திருக்கிறார்கள். அப்போது வருவாய் குறைவு, இப்போது வருவாய் அதிகம்.
இப்படி இருக்கும்போது எப்படி வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியும். கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழ்நாடுதான் இருக்கிறது இதுதான் ஸ்டாலினுடைய சாதனை” என்று கூறினார்.
தொடர்ந்து,பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஸ்டாலின் அளித்த ஆதாரம் தான் உண்மை என்று சபாநாயகர் சொல்லிவிட்டாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “அப்படி சொன்னால் தான் அவர் அந்த இருக்கையில் அமர முடியும். இல்லையென்றால் உட்கார முடியுமா. அவரால் வேறு என்ன சொல்ல முடியும்” என்று பதிலளித்தார்.
நீங்கள் முதலமைச்சராக இருந்தபோது காவல்துறை உங்கள் வசம் இருந்தது. தற்போது ஸ்டாலின் முதல்வராக இருக்கும்போது காவல்துறை அவர் வசம் உள்ளது. அப்படி இருக்கும்போது பொள்ளாச்சி விவகாரத்தில் வேறு வேறு டேட்டாவை இருவரும் கொடுத்திருக்கிறீர்களே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, “ஒருவர் புகார் கூறும் போது அதன் அடிப்படையில் தான் வழக்குப்பதிவு செய்ய முடியும். அந்த கம்பளைண்ட்டில் யாரை குற்றம் சாட்டியிருக்கிறாரோ… அவரை தான் கைது செய்ய முடியும். இவர் வாழைப்பழம் கதை மாதிரி சொல்கிறார்.
பத்து நாளைக்கு முன்னதாக புகார் கொடுத்ததாக அவர் சொல்கிறார். தேதியை சொல்லுங்கள்.. எந்த அடிப்படையில் இவர் சொல்கிறார். எஃப்ஐஆர் பதிவு செய்த தேதியை நாங்கள் சொல்கிறோம். க்ரைம் நம்பரோடு சொல்கிறோம்….
அடுத்த நாளே மூன்று பேர் கைது செய்யப்பட்டு விட்டார்கள். அவர்கள் ஆதாரமே இல்லாமல் பேசுகிறார்கள்.
இந்த வழக்கு முடிந்து தீர்ப்பு வந்தால் உண்மை வெளியே வரும்” என்று கூறினார்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “அந்த மாணவி புகார் அளித்ததும் சம்பந்தப்பட்டவரை அழைத்து விசாரணை செய்து வெளியே விட்டுவிட்டார்கள். எதற்கு வெளியே விட வேண்டும். அதிமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகுதான் வேகவேகமாக சென்று குற்றவாளியை கைது செய்திருக்கிறார்கள். இவர்களைப் போல குற்றவாளியை காப்பாற்றுகிற அரசு அதிமுக அரசு அல்ல. கைதான ஞானசேகரன் திமுக மாநாட்டுக்கு எல்லாம் போகிறார் வருகிறார்… ஆனால் திமுக அனுதாபி என்கிறார்கள். பெரிய பெரிய பிரமுகர் எல்லாம் இவரிடம் சென்று பிரியாணி சாப்பிடுவார்கள். ஒரு முக்கிய பிரமுகர் அகப்பட்டுவிட்டதாக தெரிகிறது. அதனால்தான் நாங்கள் யார் அந்த சார் என்று கேட்கிறோம்” என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர், “சட்டமன்றத்தில் நான் பேசிய வீடியோ பதிவை கேட்டேன். ஏனென்றால் நான் பேசுவதை எடிட் செய்து விடுகிறார்கள். 2.55 நிமிடம் நான் பேசியதாக செய்தித்தாள்களிலேயே போட்டிருக்கிறார்கள். ஆனால் நான் கேட்டதற்கு வெறும் 2 நிமிட வீடியோவை கொடுக்கிறார் சபாநாயகர். அப்படிப்பட்ட சபாநாயகர் எப்படி நடுநிலையாக இருப்பார். ஆளும் கட்சிக்கு ஒரு நீதி எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என்று செயல்படுகிறார்.
அதிமுக பக்கம் கேமராவை திருப்பினால் மட்டும் தொழில்நுட்ப பிரச்சனை வந்துவிடும். வைரஸ் ஏறிவிடும். திமுக பக்கமோ சபாநாயகர் பக்கமோ திருப்பினால் மட்டும் வைரஸ் அழிந்துவிடுமாம். இதையெல்லாம் அவரைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்” என்று விமர்சித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
திருமாவின் அரசியல் வாழ்வில் ஒரு மைல்கல்!
“இந்தப் பஞ்ச் டயலாகுலாம் இங்க எடுபடாது” : விஜய்க்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி!