தமிழகத்தில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் நிச்சயமாக வெற்றி பெற்று இருக்கும் என மதுரை ஆதீனம் இன்று (ஜூன் 10) தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதீனத்தின் 293வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் இன்று (ஜூன் 10) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடிக்கு வாழ்த்துகள். தமிழகத்தில் வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள். மேலும், அதிக வாக்குகள் பெற்ற சீமான் மற்றும் அண்ணாமலை, புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்கள் ஆகியோருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
இந்திரா காந்தியால் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை பிரதமர் மோடி மீட்டு தமிழகத்தோடு இணைக்க வேண்டும். மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடிக்க இயலாத நிலை நிலவுகிறது. படகுகள் சேதப்படுத்தப்பட்டு வலைகள் அறுக்கப்படுகின்றன. இதற்கு ஒரே தீர்வு கச்சத்தீவை மீட்பது தான்.
தற்போது எஞ்சியுள்ள ஈழத் தமிழ் மக்களை பாதுகாக்க தமிழீழத்தை உருவாக்க வேண்டும். இந்த 2 கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருமாறு பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் வைக்கிறேன்.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், அதுதான் ஜனநாயகம். ஏன் பெருந்தலைவர் காமராஜரும் இந்த ஜனநாயக முறையைத்தான் வரவேற்றார். வெற்றியோ, தோல்வியோ ஜனநாயகத்தில் மக்கள் தான் மன்னர்கள்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது பல மாநில அரசுகளை கலைத்திருக்கிறார்கள். அதற்கு தமிழகமும் விதிவிலக்கில்லை. ஆனால், பாஜக ஆட்சியில் ஒரு மாநில அரசு கூட கலைக்கப்பட்டதில்லை.
தமிழ்நாட்டில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருக்க வேண்டும். அப்படி அதிமுக – பாஜக கூட்டணி இருந்திருந்தால் நிச்சயமாக தமிழகத்தில் அதிமுக வெற்றி பெற்று இருக்கும்.
பிரதமர் மோடி இலங்கை தமிழர்களுக்கு வீடு கொடுத்திருக்கிறார். தமிழீழம் கிடைக்க பிரதமரிடம் வலியுறுத்துங்கள் என சீமான் தரப்பில் என்னிடம் கூறினார்.
அயோத்தியில் பாஜக வென்றிருந்தால் வாக்கு இயந்திரத்தை குறை கூறியிருப்பார்கள். நான் தமிழீழம் கேட்பதால் இலங்கை சென்றால் சிங்களவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழகத்தில் உள்ள 4 கடல்களில் ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!
’அதிமுக எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது’ : பன்னீர் ஆதங்கம்!
Comments are closed.