திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அதிமுக அழைப்பு விடுப்பதில் உள்நோக்கம் இருக்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் இன்று (மார்ச் 3) தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,
“திமுக தொகுதிப் பங்கீட்டு குழு நேற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார்கள். விசிக உயர்நிலைக்குழு கூட்டம் முடிவதற்கே மூன்று மணிக்கு மேல் ஆகிவிட்டது. ஆகவே, நாங்கள் உரிய முறைப்படி தகவலை தெரிவித்தோம்.
இரண்டு நாட்களில் மீண்டும் சந்திப்போம் என்று கூறியிருக்கிறோம். திமுக – விசிக இடையே எந்த கசப்பும் இல்லை. சுமூகமான முறையில் தீர்வை காண்போம்.
அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கிறதோ, அந்த நோக்கத்திற்கு எந்த சேதமும் ஏற்படாத வகையில் விசிகவின் முடிவு இருக்கும்” என்றார்.
தொடர்ந்து விசிக, அதிமுக கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமா, “அதிமுக முதலில் தங்கள் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைக்கட்டும்.
அதிமுகவோடு நட்பாக இருக்கிற பாமக மற்றும் பிற கட்சிகள் சிதறிக்கிடக்கின்றன. அதிமுக அந்த கட்சிகளை ஒருங்கிணைத்து அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீடு செய்வதில் ஆர்வம் காட்டாமல், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது என்பது அவர்களின் உள்நோக்கம் என்ன என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.
எங்கள் மீது உள்ள கரிசனம் என்று புரிந்துகொண்டாலும், ஆனால், அவர்கள் அணுகுமுறையில் ஒரு உள்நோக்கம் இருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
விசிக மிகத்தெளிவாக இருக்கிறது. திமுகவிடம் நாங்கள் மூன்று தொகுதிகளை கேட்கிறோம். தொடர்ந்து வலியுறுத்துகிறோம். அது வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
திமுக கூட்டணியில் இந்தியா கூட்டணியில் தான் தொடர்ந்து பயணிப்போம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
எங்கள் நலன் எந்தளவிற்கு முக்கியமோ அந்தளவிற்கு கூட்டணி கட்சிகளின் நலனும் மிகவும் முக்கியம். அந்தவகையில் பரஸ்பர புரிதலோடு தான் பேச்சுவார்த்தைகள் இருக்கும்.
எனவே, எங்களை திமுக குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்று நாங்கள் கருதவில்லை” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
2024 ஐபிஎல் சீசனுடன் தோனி ஓய்வா?
அதிமுக தலைவர்கள் படத்தை பயன்படுத்த பாஜக வெட்கப்பட வேண்டும்: ஜெயக்குமார்