நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய தவெக தலைவர் விஜய், நீட் விலக்குக் கோரி தமிழக சட்டமன்றம் கொண்டுவந்திருக்கும் தீர்மானத்தை மனப்பூர்வமாக ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் இன்று (ஜூலை 3) நடைபெற்று வரும் 2வது கட்ட கல்வி விருது விழாவிற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சரியாக 10 மணிக்கு வருகை தந்தார்.
தொடர்ந்து மாணவ, மாணவிகள் மத்தியில் விஜய் பேசியதாவது,
நீட் தேர்வால் பாதிப்பு என்பது சத்தியமான உண்மை!
“நான் இன்று பேச வேண்டாம் என்று தான் நினைத்தேன். ஆனால், முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி பேசவில்லை என்றால் அது நன்றாக இருக்காது.
தமிழ்நாட்டில் இருக்கும் மாணவ மாணவிகள், குறிப்பாக கிராமப்புறத்தில் இருக்கும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த மாணவ மாணவிகள் நீட் தேர்வால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது சத்தியமான உண்மை.
இந்த நீட் தேர்வை பொறுத்தவரை நான் மூன்று பிரச்னைகளை முக்கியமானதாக பார்க்கிறேன்.
’ஒரே நாடு, ஒரே தேர்வு’ – கல்விக்கு எதிரானது!
முதலாவது, இந்த நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிராக உள்ளது. 1975-க்கு முன்னால் கல்வி, மாநிலப் பட்டியலில்தான் இருந்தது. 1975-க்குப் பிறகுதான் அதை ஒன்றியப் பட்டியலில் சேர்த்தார்கள். எனக்கு தெரிந்து அப்போது தான் முதல் பிரச்னை தொடங்கியது.
’ஒரே நாடு, ஒரே பாடதிட்டங்கள், ஒரே தேர்வு’ இது அடிப்படையிலேயே கல்விக் கற்கும் நோக்கத்துக்கு எதிரானதாகவே நான் பார்க்கிறேன்.
கல்வி என்பது அந்ததந்த மாநிலங்களுக்கு ஏற்றார்போல்தான் இருக்க வேண்டும். இதை மாநில உரிமைகளுக்காக மட்டும் பேசவில்லை.
கல்வி முறையில் பல்வேறு கண்ணோட்டங்கள், பல்வேறு பார்வைகள் இருக்க வேண்டும். அதற்கான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பன்முகத்தன்மை என்பது பலமே தவிர பலவீனம் கிடையாது.
கிராமப்புற மாணவர்களுக்கு கடினமான விஷயம்!
இரண்டாவது முக்கியமான விஷயம், மாநில மொழியில், மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு, NCERT பாடத்திட்டத்தில் தேர்வு வைத்தால் அது எப்படி சரியாகும்?
கிராமப் புறத்தில் இருக்கும் மாணவ மாணவிகளுக்கு, அதிலும் குறிப்பாக மருத்துவத் துறை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இது எவ்வளவு பெரிய கடினமான விஷயம் என்பதை யோசித்து பார்க்க வேண்டும்.
நீட் தேர்வு மீதான நம்பிக்கை போய்விட்டது!
மூன்றாவது, கடந்த மே மாதம் 5-ம் தேதி நடந்த நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக நாம் செய்திகளை பார்த்தோம். அதற்குப் பிறகு இப்போது நீட் தேர்வு மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை சுத்தமாக போய்விட்டது. நாடு முழுவதும் நீட் தேர்வு தேவையில்லை என்பதை இந்த செய்திகள் மூலமாக நாம் புரிந்துகொண்டோம்.
தீர்வு என்ன?
சரி இதற்கான தீர்வு என்ன என்றால், நீட் விலக்கு மட்டும்தான் இதற்கு உடனடித் தீர்வு.
நீட் விலக்குக் கோரி தமிழக சட்டமன்றம் கொண்டுவந்திருக்கும் தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.
இதில் காலதாமதம் செய்யாமல், தமிழ்நாட்டு மக்களின் மன உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, விரைவில் ஒன்றிய அரசு தீர்வு காண வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
நிரந்தரத் தீர்வு என்ன?
இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு என்ன என்றால், ”கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். ஒருவேளை அதில் சிக்கல்கள் இருந்தால், இடைக்காலத் தீர்வாக அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தி, சிறப்பு பொதுப்பட்டியல் (special concurrent list) ஒன்றை உருவாக்கி, அதில் கல்வி மற்றும் சுகாதாரத்துறையை சேர்க்க வேண்டும்.
இப்போது இருக்கும் பொதுப்பட்டியலில் இருக்கும் சிக்கல் என்னவென்றால், மாநில அரசுகளுக்கு அதில் என்னதான் அதிகாரம் இருந்தாலும், அது முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.
எனவே, கல்வி விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் தரப்பட வேண்டும் என்பது தான் என் தாழ்மையான வேண்டுகோள்.
ஒன்றிய அரசு அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் தேர்வு நடத்த வேண்டுமானால் நடத்திக்கொள்ளட்டும்.
ஆனால் இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், நாம் கேட்பது உடனே நடக்குமா என்றால், நடந்தாலும் அதை நடக்க விடமாட்டார்கள் என்பதும் எனக்குத் தெரியும். ஆனாலும், இந்த சந்தர்ப்பத்தில் என் கருத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
வெற்றி நிச்சயம்!
அழுத்தம் இல்லாம ஜாலியா படிங்க… இந்த உலகம் மிகப் பெரியது. வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. ஒன்று உங்களை விட்டு தவறுகிறது என்றால், அதைவிட வேறு ஒன்று பெரிதாக கடவுள் உங்களுக்காக வைத்திருக்கிறார் என்று அர்த்தம். அதைத் தேடி கண்டுபிடியுங்கள். தன்னம்பிக்கையுடன் இருங்கள், நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்” என்று பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா