அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை படித்துவிட்டு மூன்று நாட்களாக தூங்கவில்லை என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
கடந்த 2006-11 காலகட்டத்தில் பள்ளிகல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை மீது 2012-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசியல் காரணங்களுக்காக அதிமுக ஆட்சியில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரியும் தங்கம் தென்னரசு, அவரது மனைவி தரப்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கிலிருந்து 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டனர்
2006-11 காலகட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2012-ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்தது. வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் உரிய வருவாய் ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படாததால், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூா்த்தி ஆகியோரை கடந்த ஜூலை 20-ஆம் தேதி வழக்கிலிருந்து விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த இரு உத்தரவுகளையும் எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்படாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.பி எல்.எல்.ஏ-க்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, “உச்சநீதிமன்றம் உத்தரவுகள் சிலவற்றை முன்வைக்கிறோம். அதனை கருத்தில் கேட்டுவிட்டு சூமோட்டோ வழக்கை விசாரிக்க வேண்டும்” என்று நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.
அதனை ஏற்க மறுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “அமைச்சர்கள் இருவரையும் ஒரே நடைமுறையை பின்பற்றி தேதியை மட்டும் மாற்றம் செய்து விடுதலை செய்துள்ளார்கள். கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை படித்துவிட்டு மூன்று நாட்களாக தூங்கவில்லை. இந்த தீர்ப்பு மனதை உறுத்தியது. இதனை கண்டும் காணாமல் இருந்துவிட்டால் கடமையை செய்ய தவறியதாக இருந்துவிடும்.
நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது. அதனால் தான் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளேன். நீதிமன்றம் என்பது குறிப்பிட்ட கட்சியினருக்கோ, அரசு தரப்புக்கோ உரித்தானது கிடையாது. சாதாரண ஏழை எளிய மக்களுக்கு சொந்தமானது. அவர்களுக்கு தேவையான தீர்ப்பை வழங்க வேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கில் 2021-ஆம் ஆண்டுக்கு பிறகு யூடர்ன் அடித்து தங்கள் நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர். ஆட்சியாளர்களுக்கு தகுந்தாற்போல அதிகாரிகள் மாறுகிறார்கள். அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியோர் சூமோட்டோ வழக்கில் பதிலளிக்க வேண்டும். வழக்கின் விசாரணை செப்டம்பர் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
திமுக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிபதி அதிருப்தி!
சென்னையில் உலக திரைப்பட விழா எப்போது?