“தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டது” – தமிழிசை குற்றச்சாட்டு

Published On:

| By Selvam

புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலங்கானா மாநில ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தனது தொலைபேசி உரையாடல்கள் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி அரசால் ஒட்டுக் கேட்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று (நவம்பர் 9) தெலங்கானாவில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், “எனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக நான் சந்தேகிக்கின்றேன். தெலங்கானா மாநிலத்தில் ஆளுநருக்கு ஜனநாயகமற்ற சூழல் நிலவுகிறது.

அக்டோபர் 27-ஆம் தேதி தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், தெலங்கானா எம்.எல்.ஏ பேர வழக்கில் ராஜ் பவனுக்கு தொடர்பிருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

மேலும், அந்த ட்விட்டர் பதிவில் என்னுடைய புகைப்படம் உள்ளது. இதனால் என்னுடைய தனியுரிமை பறிக்கப்படுகிறது. ஏன் என்னுடைய பெயரை தெலங்கானா எம்.எல்.ஏ பேர வழக்கில் இழுக்கிறார்கள்?

மேலும், என்னுடைய உதவியாளர் துஷார் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. நான் எதற்கும் பயப்பட மாட்டேன். நான் செய்யும் அனைத்து வேலைகளும் வெளிப்படையானது. அவர்கள் விருப்பப்பட்டால் என்னுடைய தொலைபேசியை ஆராயட்டும்.

தெலங்கானா அரசு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட சில மசோதாக்களை ஆளுநர் காலம் தாழ்த்துவதாக எழுந்த குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன். ஒப்புதல் அளிப்பதற்கு முன்பு மசோதாக்களை மதிப்பிட்டு ஆய்வு செய்கிறேன்.” என்றார்.

முன்னதாக, ஆளுநர் உரையுடன் துவங்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநருக்கு முறையான பாதுகாப்பு வசதிகளை வழங்கவில்லை என்றும் ஆளுநரின் கடமையை செய்ய தெலங்கானா அரசு தடுக்கிறது என்றும் தமிழிசை குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஆளுநர் தமிழிசை பாஜக தலைவர் போன்று தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியுடன் பாகுபாடு காட்டுவதாக அக்கட்சி தெரிவித்திருந்தது.

செல்வம்

ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள்!

கோவை வெடிப்பு: குறி வைத்ததே கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்குத்தான்!  அதிர வைக்கும் உண்மைகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share