உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் தமிழர்கள்… உதயநிதி பெருமிதம்!

Published On:

| By christopher

கூகுள், ஆப்பிள் மைக்ரோசாப்ட் என உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் தமிழர்களின் உழைப்பும் ஆற்றலும் இன்று தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ்நாடு அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஏற்பாட்டில் ‘அயலகத் தமிழர் தினம் 2025 கண்காட்சி மற்றும் விழா சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறுகிறது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜனவரி 11) தொடங்கி வைத்தார்.

பின்னர் விழாவில் பேசிய அவர், “கடந்த ஆண்டு தமிழ் வெல்லும் என்ற கருப் பொருளில் அயலகத் தமிழர் தின விழாவை தொடங்கி வைத்தேன். இந்தாண்டு ‘எத்திசையும் தமிழணங்கே’ என்ற கருப் பொருளில் அயலகத் தமிழர் விழாவை தொடங்கி வைக்கிறேன்.

உலகெங்கும் வாழும் தமிழர்களை கருத்திற்கொண்டு, அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையை தமிழக அரசு கடந்த 2021ஆம் ஆண்டு உருவாக்கியது.

இன்று அயலக தமிழர் நல வாரியத்தில் 26 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அயலத் தமிழர் நலனுக்காக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து உழைத்து வருகிறார். திராவிட மாடல் அரசு மிகுந்த அக்கறையுடன் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

உலக அளவில் தமிழர்களின் உழைப்பும் ஆற்றலும் இன்று தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. கூகுள், ஆப்பிள் மைக்ரோசாப்ட் என உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் தமிழர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்.

வெளிநாடுகளில் ஏதாவது பிரச்சனை என்றால் உடனே களத்தில் இறங்கி அவர்களை மீட்கும் பணியில் அயலக தமிழர் துறை ஈடுபடுகிறது. உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் சமயங்களில் அங்கு படிக்கும் மாணவர்களை பத்திரமாக மீட்டு தமிழக அரசு அழைத்து வந்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் கிட்டத்தட்ட 2500 பேரை அயலக தமிழர் நலத்துறை மீட்டு வந்துள்ளது.

உலகெங்கும் வாழும் தமிழர்களுக்காக பல்வேறு விருதுகளை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. உலக தமிழர்களுக்காக உழைக்கின்ற அரசாக திராவிட மாடல் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது” என்று உதயநிதி பேசினார்.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

கோவம் வரல… சிரிப்புதான் வந்தது… : பேரவையில் அதிமுகவினரை கிண்டலடித்த ஸ்டாலின்

வரப்போகும் புதிய நீதிமன்றங்கள்: எங்கெங்கு தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share