வெள்ளத்தில் சென்னை… களப்பணியில் அமைச்சர்கள்

Published On:

| By christopher

மிக்ஜாம் புயலால் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையைத் தொடர்ந்து சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. பள்ளிக்கரணை, பெருங்குடி, ஆவடி, தி.நகர் உள்ளிட்ட பல்வேறு தாழ்வான பகுதிகள் வெள்ளநீரால் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கிருந்த மக்களை நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு முதல் மழையின் அளவு மற்றும் காற்றின் வேகம் சற்று குறைந்துள்ள நிலையில் மழை நீரை அகற்றும் பணியில் அரசு விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றது.

பெரும்பாலான இடங்களில் மழை நீர் அகற்றப்பட்டு இன்று காலை முதல் போக்குவரத்தும், மின் விநியோகமும் மீண்டும் துவங்கியுள்ளன.

இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், காவல்துறையினர் அனைவரும் ஆய்வு செய்து மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

Image

முதல்வர் ஸ்டாலின்

இன்று காலையில், சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று முதல்வர் ஸ்டாலின், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற கட்டுப்பாட்டு அறையில் இருந்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Image

தொடர்ந்து மாநகராட்சிக்குட்பட்ட கல்யாணபுரம்,  யானைகவுனி, சூளை கண்ணப்பர் திடல் போன்ற பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களுக்கு சென்று அங்கு தஞ்சம் அடைந்துள்ள மக்களை சந்தித்து வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பொதுமக்களுக்கு உணவு, பாய், போர்வை ஆகியவற்றை வழங்கி, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து தரும் என்று உறுதியளித்தார்.

Image

பின்னர், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், தூய்மைப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டின் பல்வேறு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளிலிருந்து களப் பணி ஆற்றுவதற்காக வருகை தந்த பணியாளர்களை சந்தித்து, பணிகளை விரைந்து மேற்கொள்ள முதல்வர் அறிவுறுத்தினார்.

Image

அமைச்சர் கே.என்.நேரு

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இராயபுரம் மண்டல அலுவலகத்தில், கனமழையால் பாதிக்கப்பட்ட மூலக்கொத்தளம் பகுதியில் உள்ள முகாமினை பார்வையிட்டு, அங்கு தங்கியிருக்கும் மக்களுக்கான அடிப்படை வசதிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கு தங்கியிருக்கும் மக்களுக்கு உணவு வழங்கினார்.

அவருடன் அமைச்சர் சேகர்பாபுவும் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.

Image

அமைச்சர் எ.வ.வேலு

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு சென்னை வேளச்சேரி மெயின்ரோடு, விஜயநகர், புறநகர் ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து அரசு அதிகாரிகளுடன் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து  அந்த பகுதிகளில் இருந்த மக்களுக்கும் உணவு வழங்கினார்.

Image

அமைச்சர் உதயநிதி

சென்னை வேளச்சேரி சாலை – ஐந்து பர்லாங் சாலை சந்திப்பில் கட்டுமானப் பணிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட 80 அடி பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் சிக்கிய இருவரை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த மீட்பு பணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு. மற்றும் மா.சுப்பிரமணியன்
ஆகியோருடன் நேரில் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து வேளச்சேரி ஏரியின் உபரிநீர் வெளியேறத் தடையாக அதன் அருகில் உள்ள கால்வாயில் மழை நீரால் அடித்து வரப்பட்டு தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணியை உதயநிதி நேரில் ஆய்வு செய்தார்.  மேலும், அப்பகுதியில், மழை – வெள்ளத்தால் பாதிப்புகளை சந்தித்த பொதுமக்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

Image

அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை கொட்டிவாக்கம் துணை மின் நிலையத்தில் ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு, மின் விநியோகம் வழங்கப்பட்டு வருவது குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். மின் விநியோகம் தடையின்றி வழங்க உத்தரவிட்டார்.

Image

அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை சோழிங்கநல்லூர் பால் பண்ணை வளாகங்களில் கடுமையாக வெள்ளம் தேங்கியிருந்த நிலையில் நீரை வெளியேற்றி பால் போக்குவரத்தை சீராக்குவது கடும் சவால். இச்சூழலில்  பால்பண்ணையில் இன்று அதிகாலை பார்வையிட்டு பால் விநியோகத்திற்கான முழு ஏற்பாடுகளையும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பார்வையிட்டார்.

தொடர்ந்து, அம்பத்தூர் பால் பண்ணை முழுவதும் தண்ணீரில் மூழ்கிய நிலையில்  டிராக்டரில் சென்று பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர் மனோ தங்கராஜ், ஆவின் பால் வினியோகத்தை சீர்படுத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு உத்தரவிட்டார்.

கிறிஸ்டோபர் ஜெமா

ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைப்பு!

எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம்… ஆனால் மீண்டும் உள்ளே வர முடியுமா?

 

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share