மார்ச் 18-ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திர எண்களை வெளியிட எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் இன்று (மார்ச் 15) உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டது. மேலும், அதனை தேர்தல் ஆணையம் தங்களது இணையதள பக்கத்தில் வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க ஜூன் 30-வரை கால அவகாசம் கேட்டு எஸ்பிஐ உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், மார்ச் 12-ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திர விவரங்களை எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும், அதை தேர்தல் ஆணையம் மார்ச் 15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தங்களது இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
அதன்படி மார்ச் 12-ஆம் தேதி தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்தில் எஸ்பிஐ சமர்ப்பித்திருந்தது.
இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை வழங்கியவர்களின் விவரங்கள் மற்றும் நன்கொடை பெற்ற கட்சிகளின் விவரங்களை தேர்தல் ஆணையம் தனித்தனியாக நேற்று வெளியிட்டது.
இந்தநிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் ஆஜராகி, “தேர்தல் ஆணையத்தால் பதிவேற்றம் செய்யப்பட்ட தேர்தல் பத்திர விவரங்களில் தேர்தல் பத்திர எண்கள் இடம்பெறவில்லை. இதனால் எந்தெந்த கட்சிகளுக்கு நிறுவனங்கள் எவ்வளவு நன்கொடை வழங்கினார்கள் என்ற தெளிவான விவரங்கள் இல்லை” என்ற வாதத்தை முன்வைத்தார்.
இதனையடுத்து நீதிபதிகள், “தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டிருந்தோம். பின்னர், ஏன் தேர்தல் பத்திர எண்களை வெளியிடவில்லை? மார்ச் 18-ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திர எண்களை எஸ்பிஐ வங்கி வெளியிட வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரதமர் வருகை: கன்னியாகுமரியில் மீனவர்கள் இன்று மீன் பிடிக்கத் தடை!