’நாங்கள் இரட்டை வேடம்னா, நீங்கள் நான்கு வேடம்’- சட்டமன்றத்தில் ஸ்டாலின் vs எடப்பாடி

Published On:

| By Kavi

தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஜனவரி 10) முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவை இன்று ஐந்தாவது நாளாக கூடியது. காலை கேள்வி நேரம் முடிந்ததும் முதல்வர் ஸ்டாலின் பெண்கள் பாதுகாப்புக்கான சட்ட திருத்தத்தை கொண்டு வந்தார்.

தொடர்ந்து சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது.

நீட் தேர்வு, போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பு, ஆளுநர் விவகாரம், கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா என இருவருக்கும் இடையே அனல் பறக்கும் வாதங்கள் நடந்தன.

“ஆளுநர் தனது உரையில் ஏற்கனவே பெரியார், அண்ணா, அம்பேத்கர் ஆகியோரது பெயர்களை வாசிக்கவில்லை. கடந்த முறை தமிழர் பெருமைகளை ஆளுநர் வாசிக்க மறுத்தார். அப்போதெல்லாம் போராடாத திமுக, இப்போது எதை திசை திருப்ப ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியது?” என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்ப,

“இந்த முறை ஆளுநர் முழு உரையையும் படிக்காமல் சென்று விட்டார். அதனால்தான் போராட்டம் நடத்தினோம்?” என்று ஸ்டாலின் பதிலளித்தார்.

இதற்கு எடப்பாடி பழனிசாமி, “அதிமுக பொதுக்கூட்டங்களுக்கும், போராட்டங்களுக்கும் நீதிமன்றம் சென்று தான் அனுமதி வாங்க வேண்டி இருக்கிறது” என்று பேச,

முதல்வர் ஸ்டாலின், “எங்கு போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுகிறதோ, அங்குதான் போராட முடியும். அனுமதி இல்லாத இடத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தியதால்தான் வழக்கு, கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இது உங்கள் ஆட்சி காலத்திலும் நடந்திருக்கிறது” என்று பதிலளித்தார்.

தொடர்ந்து நீட் தேர்வு தொடர்பாக கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொன்னீர்களே. இதுவரை விலக்கு பெறாதது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு முதல்வர் ஸ்டாலின், “இப்போதும் சொல்கிறேன்… நீட் தேர்வு தொடர்பான எங்கள் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கிடைக்கும் என ராகுல் காந்தி கூட கூறியிருக்கிறார். நாங்கள் ஆட்சியில் இருந்தவரை நீட் தேர்வு இல்லை. நீங்கள் வந்த போது தான் நீட் தேர்வும் உள்ளே வந்தது” என்று கூற,

எடப்பாடி பழனிசாமி,“நீட் தேர்வுக்கு ஆரம்பப் புள்ளி போட்டது உங்கள் ஆட்சியில் தான்”என்று கூறினார்.

உடனே முதல்வர் ஸ்டாலின் தவறான கருத்தை பதிவு செய்ய வேண்டாம் என்று கூறியதுடன், நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் நீட் தேர்வை ஏற்கவில்லை என்று பதிலளித்தார்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, “இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும் வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது. நீங்கள் நூற்றாண்டு நாணயம் வெளியிடும்போது பாஜக அமைச்சரை அழைத்து தானே வெளியிட்டீர்கள். நாணயம் வெளியீட்டு விழா அரசு நிகழ்ச்சியாக இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் அது கட்சி நிகழ்ச்சி” என்று கூற,

இதற்கு முதல்வர் ஸ்டாலின், ”அவர் ஒன்றிய அமைச்சர். அதனால் அவரை அழைத்து வெளியிட்டோம். அதில் என்ன தவறு இருக்கிறது? அதுபோன்று அது அரசு நிகழ்ச்சிதான்” என்று பதிலளிக்க,

எடப்பாடி பழனிசாமி, “நீங்கள் இரட்டை வேடம் போடுகிறீர்கள்” என்றார்.

உடனே முதல்வர் ஸ்டாலின்… ”நாங்கள் இரட்டை வேடம் போடுகிறோம் என்றால்… நீங்கள் நான்கு வேடம் போடுகிறீர்கள்” என்று பதிலளித்தார்.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெறியேறியபோதும்… கள்ளக்கூட்டணி என்று ஏன் சொல்கிறீர்கள்… என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்ப, சபாநாயகர் அப்பாவு, “வெளியில் பேசும் போது எதை வேண்டுமானால் பேசலாம், அவையில் அப்படி யாரும் பேசவில்லை” என்றார்.

அப்போது அவை முன்னவர் துரைமுருகன், ”அவர்கள் வெளிநடப்பு செய்யப் போகிறார்கள் அதற்கு தயாராகவே வந்துள்ளார்கள்” என்றார்.

இப்படி முதல்வர் ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி, தமிழ்த்தாய் வாழ்த்து நேரலையில் காட்டப்படவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவ்வளவுதான் மரியாதையா என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு சபாநாயகர் அப்பாவு, இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேரலை போட முடியவில்லை. இதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் என்று விளக்கமளித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

பிரபல ஐரோப்பிய நாட்டின் பிரதமர் : கொச்சியில் சும்மா சுற்றி திரிந்தது ஏன்?

பொங்கலுக்கு ஊருக்கு கிளம்பீட்டீங்களா?: சிறப்பு பேருந்துகள் முழு விவரம் இதோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share