அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 11வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவ சிகிச்சைகளுக்குப் பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 2 முறை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தொடர்ந்து உயர்நீதிமன்றமும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதியுடன் நீதிமன்ற காவல் நிறைவடைந்ததால் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நவம்பர் 22 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் இன்றுடன் நீதிமன்ற காவல் நிறைவடைய உள்ளதால் மருத்துவமனையில் இருந்தே செந்தில் பாலாஜி காணொளி காட்சி வாயிலாக நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது செந்தில் பாலாஜிக்கு டிசம்பர் 4 ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். அதன்படி 11வது முறையாக செந்தில் பாலாஜிக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா