வைஃபை ஆன் செய்ததும் செந்தில்பாலாஜி ஆகஸ்டு 12 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்ஆன காட்சிகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது. ஆகஸ்டு 7 முதல் 5 நாள் அமலாக்கத்துறை கஸ்டடியில் இருந்த செந்தில்பாலாஜி ஆகஸ்டு 12 பிற்பகல் 3 மணிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது அவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை. செந்தில்பாலாஜியை வரும் ஆகஸ்டு 25 ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார் நீதிபதி அல்லி. அதையடுத்து கஸ்டடியில் இருந்து மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் செந்தில்பாலாஜி.
மீண்டும் செந்தில்பாலாஜியை கஸ்டடி கேட்க திட்டமிட்டு வருகிறது அமலாக்கத்துறை. அதேநேரம் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக், அவரது மனைவி நிர்மலா, அவரது தாயார் ஆகியோரை டார்கெட் வைத்தும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது அமலாக்கத்துறை.
செந்தில்பாலாஜியை கஸ்டடியில் எடுத்து விசாரித்தபோது பல கேள்விகளுக்கு, ‘என் தம்பிக்குதான் அதெல்லாம் தெரியும்’ என்றே பதில் சொல்லியிருக்கிறார். அந்த அளவுக்கு செந்தில்பாலாஜியின் அரசியல் அதிகார வாழ்வில் முக்கியத்துவம் பெற்றவர் அசோக்.
இந்த திமுக ஆட்சியில் செந்தில்பாலாஜி அமைச்சராக பதவியேற்ற கொஞ்ச நாட்களிலேயே அப்போது அவர் வகித்த மின்சாரம், மதுவிலக்குத் துறை ஆகிய இரு துறைகளின் உயரதிகாரிகளிடம், ‘எனக்கு கட்சிப் பணிகள் நிறைய இருக்கின்றன. அதனால் எனது அமைச்சகப் பணிகளில் தம்பி அசோக் உறுதுணையாக இருப்பார். முக்கியமான விஷயங்களில் அவரிடம் ஆலோசனை பெறுங்கள்’ என்று செந்தில்பாலாஜியே வாய்மொழியாக கூறியதாகவும்… இது ஸ்டாலினுக்கும் தெரியும் என்றும் அப்போதே கோட்டை வட்டாரத்தில் பேசப்பட்டது.
இந்த அளவுக்கு செந்தில்பாலாஜிக்கு முக்கியமானவர் அசோக். அதேபோல அசோக்கின் பின் பலமாக இருந்து செயல்பட்டவர் அவரது மனைவி நிர்மலா. செந்தில்பாலாஜி, அசோக் தொடர்பான பணப் பரிவர்த்தனைகள், வரவு செலவுகள், கணக்கு வழக்குகளை எல்லாம் கவனித்துக் கொள்வது நிர்மலாதான்.
கரூர் சேலம் பைபாஸ் சாலையில் அசோக் கட்டி வரும் இரண்டரை ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள பங்களாவை சில நாட்களுக்கு முன் அமலாக்கத்துறை முடக்கியது. மேலும் அசோக்கின் மனைவி நிர்மலா விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியது. ஏற்கனவே கடந்த நான்கு மாதங்களாக அசோக் தலைமறைவாக இருக்கும் நிலையில் தற்போது அவரது மனைவியை விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள். இதெல்லாம் வெளிப்படையாக நடக்கும் விஷயங்கள்.
அதேநேரம் தங்களது விசாரணை உத்தியின் ஒரு வகையாக அசோக்கின் மனைவி நிர்மலாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது நலம் விரும்பிகள் மூலம் அணுகியிருக்கிறார்கள். அதிகாரபூர்வமற்ற வகையில் நடந்த இந்த உரையாடலில், ‘உங்கள் கணவர் நான்கு மாசமாக தலைமறைவாக இருக்கிறார். உங்கள் கணவரின் அண்ணன் செந்தில்பாலாஜி தற்போது சிறையில் இருக்கிறார். அவர் வெளிவர இன்னும் சில மாதங்கள் ஆகும். இந்த நிலையில் நீங்கள் (நிர்மலா) ஒத்துழைப்பு கொடுத்தால் உங்க குடும்பத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது. இல்லைன்னா தேவையில்லாம உங்கள் குடும்பம் மட்டுமே சிறையில் இருக்கும். உங்க அம்மாவும் சிறைக்கு செல்ல நேரிடும், உங்க கணவரும் (அசோக்) சிறைக்கு போக வேண்டும்.
அதனால எங்களுக்கு தேவையான விஷயங்களை சொல்லீட்டீங்கன்னா உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது’ என்று அமலாக்கத் துறையினர் நிர்மலாவிடம் மிதமான மிரட்டல் தொனியில் அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த உரையாடல் முடிந்த நிலையில்தான் நிர்மலாவுக்கு சம்மன் கொடுத்திருக்கிறது அமலாக்கத்துறை. நிர்மலா கொடுத்திருக்கும் தகவல்கள் உதவிகரமாக இருந்ததாகவும்… ஒருவேளை செந்தில்பாலாஜியின் தம்பி மனைவி நிர்மலா அப்ரூவர் ஆனாலும் ஆகலாம் என்றும் அமலாக்கத்துறை வட்டாரத்திலேயே நம்பிக்கையாக பேசப்படுகிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
HACT2023: டிராவை நோக்கி தள்ளிய கொரியா… தட்டித்தூக்கிய ஜப்பான்!