ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் முறைகேடு: ஸ்டாலினுக்கு எடப்பாடி கண்டனம்!

Published On:

| By christopher

scam in Adi Dravidar and Tribal Welfare Department: Edappadi condemns Stalin!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் நலத் திட்டங்களை செயல்படுத்தாமலும், நடைபெறும் முறைகேடுகளை தடுக்காமலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் திமுக அரசு வேடிக்கை பார்ப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (அக்டோபர் 13) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பாக பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

குறிப்பாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கி வரும் மாணவ, மாணவியர் விடுதிகளில் குடிநீர் சுத்திகரிக்கும் கருவிகள் பொருத்தப்பட்டன.

மாணவியர் விடுதிகளில் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படும் நிதி உதவி ரூ. 40,000/-த்திலிருந்து ரூ. 50,000/-ஆக உயர்த்தப்பட்டது.

மாணாக்கர்களின் ஆங்கில மொழிப் புலமையை அதிகரிக்க சிறப்பு ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. ஈமச் சடங்கிற்கான நிதியுதவி 2,500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

ஆதிதிராவிட மக்கள், வீட்டு சுப நிகழ்ச்சிகளைக் கொண்டாடும் வகையில் மாநிலம் முழுவதும் சமுதாயக் கூடங்கள் கட்டப்பட்டன.

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ், 2020-2021ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 8,800 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடும்பங்களுக்கு ரூ. 265 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.

தாட்கோ மூலம் இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு, தொழில் முனைவோர், நிலமேம்பாட்டுத் திட்டம் மற்றும் சுய உதவிக்குழு பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இவ்வாறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் அம்மாவின் அரசு செயல்படுத்திய திட்டங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆனால், 41 மாத கால திரு. ஸ்டாலினின் திமுக அரசு, ஆட்சிக்கு வந்தது முதல் ஆதிதிராவிடர் நலத் துறை செயல்படுகிறதா என்ற சந்தேகம் அனைவரிடமும் எழுந்துள்ளது.

தமிழ் நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேலாண்மை கழகத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 90-க்கும் மேற்பட்ட மாவட்ட மேலாளர், துணை மேலாளர், உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் போன்ற பணியாளர்களை தமிழ் நாடு அரசு தேர்வாணையம், வேலை வாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி அல்லது அரசு விதிமுறைப்படி நியமிக்காமல், நேரடியாக நியமனம் செய்து அவர்களுக்கு 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் நலத் துறை மாணவ, மாணவியர் விடுதிகளுக்கு ஒருங்கிணைந்த சமையற் கூடம் ஏற்படுத்தப்பட்டு, அங்கிருந்து உணவுகள் விடுதிகளுக்கு எடுத்துச் செல்லும் முறையை இந்த அரசு அறிமுகப்படுத்தியது. இந்த ஒப்பந்தம் வேறொரு மாநிலத்தைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு விடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் பட்டியலினத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சமையலர், சமையல் உதவியாளர் போன்ற பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டு, சமான்ய மக்களின் வேலை வாய்ப்பு பறிபோயுள்ளது. ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும் சுமார் 1138 கல்வி நிறுவனங்களில், சுமார் 1300-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப திரு. ஸ்டாலினின் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது இப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப திட்டமிட்டுள்ளதாகவும், இதன்மூலம் திராவிட மாடல் அரசின் பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கான வேலை வாய்ப்பு பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தென் மாவட்டங்களில் விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக தொலைதூர வட மாவட்டங்களுக்கு பணி மாறுதல் செய்யப்படுவதால் ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

எனது முந்தைய அறிக்கைகளில், சென்னையில் கல்லூரி மாணவர்கள் தங்கும் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் வெளியாட்கள் தங்குவதையும், தங்கியுள்ள மாணவர்களுக்கு சரியாக உணவு வழங்கப்படாத நிலையையும்

தென்காசி மாவட்டம், வெங்கடாம்பட்டி ஊராட்சியில், லெட்சுமியூர், ஆறுமுகப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க, அதிமுக ஒன்றிய கவுன்சிலர் 5.10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியும் குடிநீர் வழங்கப்படாத நிலையையும்,

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் இருக்கும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் குறித்து இதுவரை உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் படவில்லை என்பதையும்,

ஒவ்வொரு வருடமும் மத்திய அரசிடமிருந்து ஆதிதிராவிடர் மக்களுக்கு வரும் மத்திய நிதியை முழுமையாக செலவிடாமல், பெரும்பாலான நிதியை திருப்பி அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் ஸ்டாலினின் திமுக அரசு ஆதிதிராவிட மக்களுக்கு எதிராக செயல்படுவதை எனது முந்தைய அறிக்கைகளில் ஏற்கெனவே நான் சுட்டிக்காட்டி இருந்தேன்.

குறிப்பாக, பழங்குடியினர் நலத் துறையில், ‘தொல்குடி’ என்ற திட்டத்தின்கீழ் பழங்குடியின மக்களுக்கான மேம்பாட்டு வசதிகளுக்கு ஒதுக்கப்படும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாயில், பல பணிகளை செய்யாமலேயே, செய்ததாகச் சொல்லி பலகோடி ரூபாய் ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆதிதிராவிடர்களின் சம்பந்தி நான் என்று மறைந்த திமுக தலைவர் வாயளவில் அடிக்கடி கூறுவார். அதுபோலவே அவரது வழித் தோன்றலாக பரம்பரை ஆட்சிக்கும், கட்சிக்கும் தலைமை ஏற்றுள்ள மு.க. ஸ்டாலினின் 41 மாத கால திமுக ஆட்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான நலத் திட்டங்கள் முழுமையாகச் சென்றடையாமல் உள்ளதற்கும், நடைபெறும் முறைகேடுகளை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதற்கும் எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்வதோடு, இனியாவது பொம்மை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான நலத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்திட வலியுறுத்துகிறேன்” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

பிக் பாஸ் சீசன் 8 : வெளியேறுகிறாரா ரவீந்தர்?

10 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலையான பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா காலமானார்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share