சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவு : ஸ்டாலினை சந்திக்கும் திமுக கூட்டணி கட்சிகள்!

Published On:

| By Kavi

சாம்சங் ஊழியர்களின் போராட்டம் தொடர்பாக விரைவில் முதல்வரைச் சந்தித்து பேசவுள்ளோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஊதிய உயர்வு, தொழிற்சங்கம் பதிவு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டக்காரர்கள் நேற்று நள்ளிரவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். போராட்ட பந்தலை காவல்துறை அகற்றிய நிலையில் இன்றும் போராட்டம் தொடர்கிறது.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் உள்ளிட்ட சாம்சங் ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 5க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு  அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோர் இன்று (அக்டோபர் 9) நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

ஊழியர்கள் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், திமுக கூட்டணி கட்சியினர் சந்தித்து ஆதரவு தெரிவித்திருப்பது பேசு பொருளாகியுள்ளது.

இந்த சந்திப்புக்கு பின் அனைவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது திருமாவளவன் கூறுகையில், “அமைதியாக அறவழியில் போராடிக்கொண்டிருக்கிற தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு போடட்டப்பட்டுள்ளது. போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும். கைது செய்யப்பட்ட அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்.

இந்த விவகாரத்தில் முதல்வர் நேரடியாக தலையிட வேண்டும். அப்போதுதான் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும். தோழமை கட்சி தலைவர்கள் என்கிற வகையில் முதல்வரைச் சந்தித்து இந்த பிரச்சினை குறித்து பேசவுள்ளோம்.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்று சாக்கு போக்கு காட்டாமல் அரசு நேரடியாக முடிவெடுக்க முடியும். அப்படி முடிவெடுத்தால் அந்த வழக்கு செயல் இழந்து போகும். அரசுக்கு அதிகாரம் இருக்கிறது.

தொழிலாளர் நலத்துறை இணை ஆணையருக்கு பதிவாளர் என்ற முறையில் சங்கத்தை பதிவு செய்ய அதிகாரம் இருக்கிறது. அது சட்டப்பூர்வமானது. இதில் என்ன பிரச்சினை இருக்க போகிறது.

அரசு அதிகாரிகளிடம் இருக்கும் தயக்கத்தை தவிர்த்து அல்லது இந்த தேக்கத்தை உடைத்து சங்கத்தை பதிவு செய்ய முன்வர வேண்டும்.

16, 17 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் சங்கம் வைக்க அனுமதிக்காதது அடக்குமுறையாகும். சாம்சங் நிறுவனத்துக்கு நாங்கள் எதிராக இல்லை. ஆனால் அவர்களது நடைமுறை போக்கிற்கு எதிராக உள்ளோம்.

பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டுக்கு எதிராக இல்லை. ஆனால் அவர்கள் தொழிலாளர்களை சுரண்டுவதை எதிர்க்கிறோம்” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பிரியா

ஆசிரியர்கள் போராட்டம்: ஊதியம் விடுவிக்கப்படும்… உதயநிதி உறுதி!

சிதம்பரம் கோவிலில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள்… நடவடிக்கை எடுக்கத் தயங்கியதா போலீஸ்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share