அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்குப்பதிவு செய்வதற்கு அனுமதி கோரி தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்பிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று(நவம்பர் 01) மறுப்பு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்க மறுப்பதாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தலைமை நீதிபதி சந்திரசூட் அடுத்தடுத்து சில காட்டமான கேள்விகளை எழுப்பினார்.
அதன் எதிரொலியாக தமிழ்நாடு அரசு ஏற்கெனவே அனுப்பியிருந்த கோப்புகள் மீதான நடவடிக்கை குறித்து ஆளுநர் தற்போது பதிலளித்துள்ளார்.
31 பேர் விடுதலைக்கு ஒப்புதல்!
அதன்படி, நீண்ட நாட்கள் சிறையில் உள்ள கைதிகளை முன் விடுதலை செய்யும் விவகாரத்தில் 71 பேரில் 31 பேரை விடுதலை செய்ய ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
எனினும் மீதியுள்ள 39 பேரின் விடுதலை இன்னும் பரிசீலனையில் உள்ளதாகவும், ஒருவரை விடுதலை செய்வதற்கு மறுப்பு தெரிவிப்பதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
கே.சி.வீரமணி வழக்குப்பதிவு – மறுப்பு!
டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளை திருப்பி அனுப்பியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய அனுமதி கோரி தமிழ்நாடு அரசு கோப்புகளை அனுப்பி இருந்த நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இன்றைய வழக்கு விசாரணை நிலவரம்!
அப்போது தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, “சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றிய அனுப்பிய 10 மசோதாக்களையும் நவம்பர் 28-ஆம் தேதி குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார்.
இன்று வழக்கு விசாரணை நடைபெறும் நிலையில், நேற்று தான் இந்த தகவல் தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
ஆளுநரின் நடவடிக்கை அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200-ஐ சீர்குலைப்பதாக அமைந்துள்ளது” என்று அவர் வாதிட்டார்.
ஆளுநருக்கு அதிகாரம் இல்லை! – சந்திரசூட்
இதனை கேட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், “மசோதாவை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்தால் அதனை குடியரசு தலைவருக்கு அனுப்ப முடியாது. ஆளுநர் ரவி தரப்பில் குழப்பம் உள்ளது.
ஆளுநர் முதலில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார். அவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் அவர் எப்படி குடியரசு தலைவருக்கு அனுப்ப முடியும்? அவருக்கு அதற்கான அதிகாரம் இல்லையே!
மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவருக்கான அதிகாரங்கள் விரிவானது. ஆனால் ஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதி மட்டுமே” என்று காட்டமாக தெரிவித்து நீதிபதி வழக்கு விசாரணையை டிசம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ்க்கு கட்டாய ஓய்வு!
IndVsAus: ரூபாய் 3.16 கோடி கரண்ட் பில் பெண்டிங்… இந்தியா-ஆஸ்திரேலியா 4-வது டி20 போட்டியில் சிக்கல்?