rajyasabha seat missing in bjp pmk alliance
அதிமுகவா, பாஜகவா என்று மாறி மாறி பேசியதில் ஒரு வழியாக பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது பாமக.
அதிமுகவுடன் பாமகவின் கூட்டணியை உறுதி செய்வதற்காக பாமக நிறுவனர் ராமதாசின் ஆலோசனையின்படி பாமக எம்.எல்.ஏ அருள் சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு 17 ஆம் தேதி மாலை சென்றார். அங்கிருந்து ஐபோனில் Face Time செயலி மூலமாக அன்புமணி மற்றும் ராமதாஸ் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியுடன் உரையாடினர். ஆனால் மறுநாள் மார்ச் 18 ஆம் தேதி, மாலை திடீர் திருப்பமாக உயர்மட்ட செயற்குழுக் கூட்டம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி பாஜகவுடன் கூட்டணியில் இணைவதாக அறிவித்தது.
இந்த நிலையில் இன்று (மார்ச் 19) காலை 6:45 மணியளவில் தைலாபுரம் தோட்டத்திற்கு நேரடியாகச் சென்றனர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர்.
வந்தவர்களை வரவேற்க தோட்டத்தின் கேட்டிலேயே காத்திருந்த அன்புமணி மற்றும் கட்சி நிர்வாகிகள், பாஜக தலைவர் வந்தவுடன் சால்வை அணிவித்து உள்ளே அழைத்துச் சென்றனர். வீட்டிற்குள் சென்ற அண்ணாமலை நேராக அன்புமணியின் தாயார் சரஸ்வதி காலில் விழுந்து ஆசி பெற்றார். வீட்டுக்கு வந்த பாஜக நிர்வாகிகளுக்கு டாக்டர் ராமதாஸ் சார்பில் சிற்றுண்டி விருந்து அளிக்கப்பட்டது.
அதன்பிறகு கூட்டணி ஓப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றிய பேச்சுவார்த்தை தொடங்கியது. பாமகவிற்கான தொகுதிகள் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டவுடன், பாஜக தரப்பில் ஏற்கனவே பிரின்ட் எடுத்து தயாராக கொண்டுவந்திருந்த ஒப்பந்தத்தினை ராமதாசிடம் கையெழுத்திடக் கொடுத்தார் அண்ணாமலை.
அந்த படிவத்தை வாங்கி படித்து ஷாக்கான ராமதாஸ் அண்ணாமலையைப் பார்த்து, ராஜ்யசபா சீட்டு பற்றிய விவரங்கள் எதுவும் இல்லையே, அது எங்கே என்று கேட்டு கையெழுத்து போட மறுத்தார். உடனே அண்ணாமலை தனது சீட்டிலிருந்து எழுந்து சென்று அவரது காதில் ரகசியமாக ஏதோ கிசுகிசுத்தார்.
அதன் பின்னர் அண்ணாமலை மற்றும் எல்.முருகன் ஆகியோர் ராமதாசையும் அன்புமணியையும் தனி அறைக்கு அழைத்துச் சென்றனர். வெளியே ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட பாமகவின் மூத்த நிர்வாகிகள் சில நிமிடங்கள் தங்களுக்குள் உரையாடிக் கொண்டிருந்தனர்.
உள்ளே தனி அறையில், டெல்லி மேல்மட்டத்தைச் சேர்ந்த சிலர் ராமதாஸுடன் அலைபேசியில் பேசினார்கள். அதன் பின் சில நிமிடங்கள் அறைக்குள் பேச்சுவார்த்தை நடந்தது.
அதன் பிறகு நால்வரும் ஹாலுக்கு வந்தவுடன் பத்திரிக்கையாளர்கள் முன்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ராமதாஸ். அப்போது ராமதாசின் முகமும், அன்புமணியின் முகமும் சற்று இறுக்கமாகவே காணப்பட்டது.
பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு 8:10 மணிக்கு பாஜகவினர் வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்த போதும் ராஜ்யசபா பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. அப்போதும் அண்ணாமலை, ‘அதெல்லாம் பேசிக்கலாம்’ என்று பதில் சொல்லிவிட்டு சேலத்துக்கு புறப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து சில நிமிடங்களில் மருத்துவர் ராமதாசும் சேலத்திற்கு கிளம்பினார். அவரைத் தொடர்ந்து அடுத்த 15 நிமிட இடைவெளியில் அன்புமணியும் சேலம் நோக்கி பயணித்தார். எப்படியோ அண்ணாமலை திட்டமிட்டபடி ராமதாசையும், அன்புமணியையும் சேலத்திற்கு கையோடு கூட்டிச் சென்றிருக்கிறார்.
ராஜ்யசபா சீட்டுக்கே பாஜக தரப்பிலிருந்து உத்திரவாதம் கொடுக்காத நிலையில்… மத்திய அமைச்சர் பதவிக்கான உத்தரவாதம் என்னாகும் என்று விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் பாமக தலைமை நிலைய நிர்வாகிகள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– வணங்காமுடி
சிதம்பரம், விழுப்புரம் வேட்பாளர்கள் : திருமாவளவன் அறிவிப்பு!
அண்ணாமலைக்கு எதிராக பெண் தொழிலதிபர்: கோவையில் திமுகவின் திட்டம்!
“பாமக 10 தொகுதிகளில் போட்டி”: அன்புமணி, அண்ணாமலை கூட்டாக பேட்டி!
பாஜக – பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது!
rajyasabha seat missing in bjp pmk alliance