ராகுல் காந்தி பதவி நீக்கம்: காங்கிரஸ் போராட்டம்!

Published On:

| By Jegadeesh

ராகுல் காந்தி எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் இன்று (மார்ச் 25 ) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை சிக்னல் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளர் காங்கேயம் குமார் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட காங்கிரசார் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் பிரதமர் மோடியின் புகைப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த நசரத்பேட்டை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர். இந்த போராட்டத்தின் காரணமாக பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும், கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் ராஜீவ்காந்தி சிலை சந்திப்பில் ராஜேஷ்குமார் எம். எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ராஜேஷ்குமார் எம். எல்.ஏ. உட்பட 100-க்கும் மேற்பட்டோரை கருங்கல் போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் சகாய பிரவீன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து மத்திய அரசை கண்டித்தும் பிரதமர் மோடியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

மேலும் , மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை , தஞ்சாவூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மத்திய அரசுக்கு 3 முக்கிய கோரிக்கை முன்வைத்த முதல்வர்

“மோடி என்றால் ஊழல்”- குஷ்புவுக்கு என்ன தண்டனை? கொதிக்கும் காங்கிரஸ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share