நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 11) இடைக்காலத் தடை விதித்துள்ளது.
நீதித்துறை மீதும் நீதிபதிகள் மீதும் பல்வேறு ஊழல் உள்ளிட்ட புகார்களை சமூக தளங்களிலும் பேட்டிகளிலும் அடுக்கி வந்தார் சவுக்கு சங்கர்.
இதையடுத்து மதுரை உயர் நீதிமன்றம் தானாகவே முன் வந்து சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்தது.
இதில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி சவுக்கு சங்கர் மீது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு அவருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்தது மதுரை உயர் நீதிமன்றம்.
இதையடுத்து சவுக்கு சங்கர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கடலூர் சிறையில் இருந்தபடியே சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் சங்கர்.
அந்த மேல்முறையீடு மனு மீது இன்று (நவம்பர் 11) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, ஜே.கே.மகேஸ்வரி அமர்வு விசாரணை நடத்தியது.
அப்போது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்,
இதையடுத்து சவுக்கு சங்கர் இன்று (நவம்பர் 11) மாலை கடலூர் மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார் என்று அவரது தரப்பினர் எதிர்பார்த்திருந்த நிலையில்,
தமிழக போலீஸார் சவுக்கு சங்கர் மீது மேலும் நான்கு வழக்குகளை தூசி தட்டி எடுத்து அவர் தொடர்ந்து சிறையிலேயே இருப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
“இன்று (நவம்பர் 11) உச்ச நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரின் வழக்கு விசாரணைக்கு வருவதை அறிந்த சென்னை மாநகர குற்றப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் குழு ஒன்று நேற்று மாலை கடலூர் மத்திய சிறைக்கு சென்றுள்ளது.
கடலூர் சிறை அதிகாரிகளிடம் ‘ஒருவேளை உச்ச நீதிமன்றம் சங்கரை இந்த வழக்கில் விடுதலை செய்ய உத்தரவிட்டாலும் அவர் மீது வேறு நான்கு வழக்குகளில் சிறையில் அடைக்கலாம்.
அதனால் சங்கரை சிறையில் இருந்து அனுப்பிடக் கூடாது’ என்று கூறியுள்ளனர். சங்கர் மீதான பிற வழக்குகளின் ஆவணங்களையும் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர்.
சவுக்கு சங்கர் மீது 2020 இல் பதிவு செய்யப்பட்ட மூன்று வழக்குகள், மற்றும் 2021 இல் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு அதில் அடங்கும்.
பிரதமர் மோடி தமிழகம் வந்த போது கோபேக் மோடி என்பதோடு Coward modi அதாவது கோழை மோடி என்று விமர்சித்ததற்கான வழக்கும் இவற்றில் ஒன்று” என்கிறார்கள் போலீஸ் வட்டாரங்களில்.
எனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோதும் சவுக்கு சங்கரை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பதற்கான ஃபார்மாலிட்டிகளை சென்னை மாநகர குற்றப் பிரிவு போலீசார் தொடங்கிவிட்டார்கள்.
–வணங்காமுடி