திருக்கோவலூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்து உயர் கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, கடந்த டிசம்பர் மாதம் சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் குற்றவாளி என்று உறுதி செய்து மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்ததால், தகுதி நீக்கத்துக்கு ஆளானார்.
இந்த நிலையில் அவரது மேல் முறையீட்டு மனுவின் பேரில் பொன்முடியை குற்றவாளி என உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு, 3 ஆண்டு சிறை தண்டனை ஆகியவற்றை நிறுத்தி வைத்து நேற்று (மார்ச் 11) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து பொன்முடி மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அவர் மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்படலாம் என்ற விவாதங்களும் எழுந்தன.
பொன்முடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவு தொடர்பான சட்ட ரீதியாக, அரசியல் ரீதியாக ஆலோசனைகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று நடத்தினார்.
இதுகுறித்து டிஜிட்டல் திண்ணையில், ‘ பொன்முடி மீண்டும் அமைச்சர் ஆவாரா? முதல்வர் ஸ்டாலின் முடிவு என்ன? என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பற்றிய அதிகாரபூர்வமான கடிதம் நேற்று மாலையே… உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கில் வாதாடிய தமிழ்நாடு அரசுத் தரப்பு வழக்கறிஞர் குமணனிடம் இருந்து தமிழக அரசின் பொதுத் துறை செயலகத்துக்கும், சட்டப்பேரவை செயலகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இரவே ஆளுநருக்கு கடிதத்தை அனுப்பி வைக்கலாமா என்ற ஆலோசனையும் நடைபெற்றது. பிறகு முழு தீர்ப்பு நகல் கிடைத்தவுடன் பொன்முடியை மீண்டும் அமைச்சராக்கும் முதல்வரின் சிபாரிசை கவர்னருக்கு அனுப்பலாம் என்று முடிவு செய்தனர்.
இன்று செய்தியாளர்களிடம் சபாநாயகர் அப்பாவு, “உச்சநீதிமன்ற தீர்ப்பு முழுமையாக கிடைத்தவுடன் ராகுல் காந்தி வழக்கில் பின்பற்றிய நடைமுறை பொன்முடி வழக்கிலும் பின்பற்றப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இன்று மாலைக்குள் உச்சநீதிமன்ற முழு தீர்ப்பு கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே திருக்கோவலூர் சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவைச் செயலகம் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருந்தது. அதை திரும்பப் பெறும் நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
எனவே விரைவில் பொன்முடி முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மீண்டும் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன என்கிறார்கள் தலைமைச் செயலக வட்டாரங்களில்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மீண்டும் நாகை, திருப்பூரில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட்
இந்தத் தொகுதிகளை வச்சிக்கங்க… இந்தத் தொகுதிகளைக் கொடுங்க… திமுக-காங்கிரஸ் கசமுசா!