தமிழர் திருநாளான தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தமிழ்நாடு அரசின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகுப்பில், பச்சரிசி 1 கிலோ, வெல்லம் 1 கிலோ, முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், பாசிப் பருப்பு 500 கிராம், ஆவின் நெய் 100 கிராம், மஞ்சள் தூள் 100 கிராம், மிளகாய் தூள் 100 கிராம், மல்லித் தூள் 100 கிராம், கடுகு 100 கிராம், சீரகம் 100 கிராம், மிளகு 50 கிராம், புளி 200 கிராம், கடலைப் பருப்பு 250 கிராம், உளுத்தம் பருப்பு 500 கிராம், ரவை 1 கிலோ, கோதுமை 1 கிலோ, உப்பு 500 கிராம், துணிப் பை 1, கரும்பு 1 உள்ளிட்ட 21 பொருட்கள் வழங்கப்பட்டன.
தமிழக அரசு வழங்கிய இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பில், அதிக குளறுபடி நடந்ததாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்தன. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “21 பொருட்கள் தருவதாக அறிவித்த நிலையில் பொருட்கள் முழுமையாக வழங்கப்படவில்லை.

பொங்கல் பரிசு தொகுப்பு எடுத்துச் செல்வதற்கு கட்டை பையை வீட்டிலிருந்து வரும்போது எடுத்து வரும்படி கூறி உள்ளனர். பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற வெல்லத்தை வழங்குவது கண்டிக்கத்தக்கது. பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கும் பொருட்கள் எடை குறைவாக வழங்கப்பட்டு வருகிறது” எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ”21 பொங்கல் பரிசுப் பொருட்கள் என்று சொல்லிவிட்டு 18 பொருட்கள் கொடுக்கப்பட்டது. அதுவும் தரமானதாக இல்லை. அரிசியில் வண்டு, பல்லி கலந்த புலி, உருகிய வெல்லம்” என விமர்சித்திருந்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “உருகும் வெல்லம், இலவம்பஞ்சு கொட்டையை மிளகு என்றும், மரத்தூளை மஞ்சள்தூள் என்றும் பொங்கல் பரிசாக வழங்கியுள்ளது இந்த கோபாலபுர அரசு” என விமர்சனம் செய்திருந்தார்.
மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, பொதுமக்களும் தொடர்ந்து குற்றம்சாட்டினர். பொங்கல் தொகுப்பை தமிழகத்தில் கொள்முதல் செய்யாமல் வட மாநிலத்தில் கொள்முதல் செய்தது ஏன்? இதில் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாகவும் தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்தனர்.

இதைத் தொடர்ந்து தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாடு மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தவறு செய்த 6 நிறுவனங்கள் மீது சுமார் 3.75 கோடி அளவிற்கு அபராதம் விதிக்கப்பட்டது.
2022ஆம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பினால் கடும் விமர்சனத்துக்குள்ளானதால், வரும் 2023ஆம் ஆண்டுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி கவனமாக ஆலோசனைகளைத் தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின்.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த பொங்கலுக்கு புதிய டிசைனில் இலவச வேட்டி, சேலைகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்தும் முதல்வர் ஆலோசித்திருக்கிறார். கடந்த பொங்கலுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கி விமர்சனத்தைச் சந்தித்ததுபோல் இந்த ஆண்டு நடக்கக் கூடாது. அதனால் பொங்கலுக்குத் தேவையான அரிசி, வெல்லம், நெய், முந்திரி உள்ளிட்ட அடிப்படைப் பொருட்களை மட்டும் கொடுக்கலாம். மற்ற பொருட்களுக்கு பதிலாக ரூ.500 பணமாகவும் கொடுக்கலாம் என ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.
இதற்காக நெய்யை, ஆவின் நிறுவனத்திடமிருந்தும் முந்திரிப் பருப்பை மாநில கூட்டுறவு சங்கங்களில் இருந்தும்தான் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் தனியாரிடம் கொள்முதல் செய்ய வேண்டாம் என்றும் முதல்வர் முடிவெடுத்திருப்பதாக கோட்டை வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
அதிமுக அரசு காலத்தில் கடந்த 2020 பொங்கல் பண்டிகைக்கு 1,000 ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பும், 2021இல், பரிசுத் தொகுப்புடன் 2,500 ரூபாய் ரொக்கம் உயர்த்தி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது திமுக அரசும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கம் அளிக்க முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்