குடும்ப அரசியல் நாட்டை சீரழித்துவிட்டது என்று சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
நாட்டின் 77-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 15) தேசியக்கொடி ஏற்றிவைத்தார்.
சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உரையாற்றியபோது, “அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகின் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் இந்தியா இருக்கும். உலகம் முழுவதும் வளர்ந்த நாடுகள் பணவீக்க நெருக்கடியை சந்தித்து வருகின்றன. பணவீக்கமானது உலக பொருளாதாரத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. நாட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம். பணவீக்கத்தில் உலகில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறப்பாக இருப்பதால் நாம் திருப்தி அடைய முடியாது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம்.
2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபோது உலக பொருதாரத்தில் இந்தியா 10-ஆவது இடத்தில் இருந்தது. 140 கோடி இந்தியர்களின் முயற்சியால் 5-ஆவது இடத்திறகு வந்துள்ளோம். இது உடனடியாக நடக்கவில்லை. நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஊழல் அரக்கர்களிடமிருந்து மீட்டு இந்திய பொருளாதாரத்தை உயர்த்தியுள்ளோம். என்னுடைய செயல்பாடுகளை பார்த்து 2019-ஆம் ஆண்டு மீண்டும் என்னை பிரதமராக்கினீர்கள். இந்த ஐந்து ஆண்டுகள் இந்தியா வளர்ச்சி அடைந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகள் என்பது 2047-ஆம் ஆண்டு இந்தியாவின் கனவை நனவாக்குவதற்கான காலகட்டமாகும்.
அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் கொடியேற்றி நாட்டின் சாதனைகள் மற்றும் வளர்ச்சிகளை உங்கள் முன்பாக கூறுவேன். ஒரு அரசியல் கட்சிக்கு ஒரே குடும்பம் மட்டும் எப்படி பொறுப்பாக இருக்க முடியும். அவர்களுடைய வாழ்க்கை மந்திரம் என்பது குடும்பத்திற்காக கட்சி நடத்து மட்டுமேயாகும். ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறேன். குடும்ப அரசியல் நாட்டை சீரழித்துவிட்டது. அது மக்களின் உரிமைகளை பறித்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.
செல்வம்
சுதந்திர தின விழா: கோட்டையில் கொடியேற்றினார் ஸ்டாலின்
“மணிப்பூர் மக்களுக்காக இந்தியா துணை நிற்கும்” – பிரதமர் மோடி