சூரிய உதயத்தை ரசித்த மோடி… இரண்டாவது நாளாக தியானம்!

Published On:

| By Kavi

7ஆம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவிருக்கும் நிலையில், குமரி வந்துள்ள பிரதமர் மோடி இன்று (மே 31)இரண்டாவது நாளாக தியானத்தை தொடர்கிறார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, நேற்று பஞ்சாப் மாநிலத்தில் தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்த அவர் சிறிது நேரம் ஓய்வுக்கு பின்னர் 5.45 மணிக்கு, குண்டு துளைக்காத காரில் பகவதி அம்மன் கோயிலுக்கு வந்தார்.

அங்கு நுழைவு வாசலில் கோயில் மேல்சாந்தி நிதின் சங்கர் போற்றி, சீனிவாச போற்றி உள்ளிட்டோர் பூரண கும்பம் மரியாதையுடன் பிரதமரை வரவேற்றனர்.

Image

அப்போது தமிழக பாரம்பரிய முறைப்படி பட்டு, வேட்டி சட்டை அணிந்திருந்த பிரதமர் மோடி, பகவதி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவரையும், ஆஞ்சநேயரையும் வழிபட்டார்.

Image

தொடர்ந்து கோயில் கொடிமரத்தை வழிபட்ட அவர் கருவறையில் உள்ள பகவதி அம்மனையும் தரிசனம் செய்தார்.

பின்னர் விநாயகரை வழிபாடு செய்தார். பிரதமருக்கு கோயில் மேலாளர் ஆனந்த், பகவதி அம்மன் புகைப்படத்தை நினைவு பரிசாக வழங்கினார்.

Image
கோயிலில் வழிபாடு செய்ததை தொடர்ந்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான விவேகானந்தா என்ற படகு கப்பல் மூலம் விவேகானந்தர் பாறைக்கு வந்தடைந்தார்.

அங்கு விவேகானந்தா கேந்திரா அகில பாரத துணைத் தலைவர் அனுமந்த ராவ் உள்ளிட்டோர் பிரதமரை வரவேற்றனர்.

ஸ்ரீ பாத மண்டபத்தில் தரிசனம் செய்த அவர், விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள விவேகானந்தரின் குருவான ராமகிருஷ்ண பரமஹம்சா, அன்னை சாரதா தேவி ஆகியோரின் உருவ படங்களுக்கு மரியாதை செலுத்தி வணங்கினார்.

விவேகானந்தரின் முழு உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றி பார்த்த பிரதமர் மோடி அங்கிருந்தவாறு, 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலையையும் கண்டு ரசித்தார்.

Image
சுமார் இரவில் 7 மணி அளவில் தியான மண்டபத்தில் அமர்ந்து பிரதமர் மோடி 5 மணி நேரத்துக்கு மேலாக தியானம் செய்தார்.

நாளை வரை 45 மணி நேரம் தியானம் செய்ய உள்ள அவர் 5 மணி நேரத்திற்கு ஒருமுறை ஓய்வு எடுப்பார் என்று தகவல்கள் வருகின்றன. அந்த சமயத்தில் இளநீர் பழச்சாறு உள்ளிட்ட திரவ உணவுகளை மட்டும் அவர் எடுத்துக் கொள்வார்.


இந்நிலையில் இன்று (மே 31) காலை முக்கடல் சங்கமிக்கும் பகுதியில் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்தவாறு சூரிய உதயத்தை கண்டு ரசித்தார். இதையடுத்து இரண்டாவது நாளாக இன்று தியானத்தில் ஈடுபட உள்ளார்.

முன்னதாக பிரதமர் மோடியை வரவேற்க தமிழக பாஜக நிர்வாகிகள் திட்டமிட்டு இருந்தனர்.

இதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு குமரியில் உள்ள விடுதியில் அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்ததாகவும், ஆனால் பாஜக மேலிடத்தின் அறிவுறுத்தலை தொடர்ந்து இவர்களது வருகை ரத்து செய்யப்பட்டதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பிரதமரை சந்திப்பதற்காக சுற்றுலா மாளிகைக்கு வருகை தந்துள்ளார். எனினும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அனுமதிக்கவில்லை என்று குமரி பாஜக நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதனிடையே பிரதமரின் குமரி வருகையை ஒட்டி குமரி சந்திப்பு ரவுண்டானாவில் இருந்து படகு தளத்துக்கு செல்லும் சாலை தடுப்பு அமைக்கப்பட்டு மூடப்பட்டது. இந்த சாலைகளில் உள்ள கடைகளை மூடுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியதின் பேரில் வியாபாரிகளும் நேற்று மதியம் கடைகளை மூடினர்.

சன்னதி தெருவிலும் ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இதனை நேற்று மாலை பகவதி அம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த போது கவனித்த பிரதமர் மோடி, ஏன் கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன என்ற கேள்வி எழுப்பி இருக்கிறார்.

எனது வருகைக்காக இந்த கடைகள் அடைக்கப்பட்டிருந்தால் உடனடியாக திறக்க சொல்லுங்கள் என்றும் அதிகாரிகளிடம் சொல்லி இருக்கிறார்.

இதையடுத்து அந்த பகுதியில் பெரும்பாலான கடைகள் நேற்று திறக்கப்பட்டன.

இன்று விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் கட்டுப்பாடுகளுடன் படகு போக்குவரத்து மூலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை வைத்திருப்போருக்கு ஸ்ரீபாத மண்டபம் வரை அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

வேலைவாய்ப்பு : HAL நிறுவனத்தில் பணி!

Singapore Open: 6 தொடர் தோல்விகள்… சறுக்கும் பி.வி சிந்து…!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.