அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கை நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் இன்று (ஏப்ரல் 20) விசாரித்து வருகின்றனர்.
அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்குத் தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கைக் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள், “இவ்வழக்கில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது.
வரும் ஏப்ரல் 20 மற்றும் 21ஆகிய இரு தேதிகளில் இறுதி விசாரணை நடைபெறும்” என்று தெரிவித்தனர்.
அதன்படி இன்று மதியம் 2.15 மணிக்கு இறுதி விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதிட்டு வருகிறார்.
“அடிப்படை உறுப்பினர் பதவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது முதல் தொடர்ந்து விதிமீறல்கள் நடந்து வருகிறது. விதிமீறி பன்னீர் செல்வத்தை எடப்பாடி பழனிசாமி நீக்கியிருக்கிறார்.
1977ல் கட்சியில் ஓபிஎஸ் சேர்ந்தார். மூன்று முறை முதலமைச்சராக இருந்துள்ளார். கட்சியின் பொருளாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராகவும், கட்சியின் திறன்மிக்க அரசியல்வாதியாகவும் இருந்தார் ஓபிஎஸ். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரும் கட்சியை வழிநடத்தி வந்த நிலையில், ஜூலை 11ஆம் தேதிக்குப் பிறகு எல்லாமே மாறிவிட்டது.
குறிப்பாக நோட்டீஸ் கொடுக்காமல் நீக்கியிருக்கின்றனர். கட்சியில் இருந்து நீக்குவதற்கு முன்னதாக எந்த அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை. இது திட்டமிட்ட சுயநல நடவடிக்கை ஆகும்.
ஒருவரை நீக்க வேண்டும் என்றால், இடை நீக்கம் செய்து விளக்கம் கேட்ட பிறகுதான் நீக்கி நடவடிக்கை எடுக்க முடியும்.
கட்சியில் இருந்து நீக்கிய போது சட்டவிதிகள் பின்பற்றப்படவில்லை என தனி நீதிபதியே ஒப்பு கொண்டிருக்கிறார்.
கட்சியின் கொள்கைகளை வகுக்கும் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவுக்கு, உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. திமுகவுடன் இணக்கமாக ஓபிஎஸ் இருக்கிறார் என்று கூறுவது பொய்யான குற்றச்சாட்டு ஆகும்.
ஈபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள்தான் கட்சி அலுவலகத்தை தாக்கினார்கள். தொலைக்காட்சிகளில் வந்த நேரலை அதை உறுதி செய்தது” என்று வாதிட்டார் வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்.
தொடர்ந்து இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
பிரியா