சிறையில் இருந்தவாறே நாடாளுமன்றத் தேர்தலில் அம்ரித் பால் சிங் மற்றும் எஞ்சினியர் ரஷீத் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
எஞ்சினியர் ரஷீத்
எஞ்சினியர் ரஷீத் என அழைக்கப்படும் அப்துல் ரஷீத், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (UAPA) சட்டத்தில் கைதாகி 2019-ம் ஆண்டு முதல் டெல்லி திகார் சிறையில் உள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பாரமுல்லா தொகுதியில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
எஞ்சினியர் ரஷித் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அவர் சிறையில் இருந்ததால், அவரது இரண்டு மகன்களும் சில வாரங்களுக்கு முன்பு தான் பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். ரஷித், வடக்கு காஷ்மீரில் உள்ள லாங்கேட் தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பாரமுல்லா தொகுதியில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் எஞ்சினியர் ரஷீத் தோற்கடித்துள்ளார்.
அதிகாரபூர்வமான முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தேசிய மாநாட்டுத் தலைவர் உமர் அப்துல்லா தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.
இது குறித்து ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தனது எக்ஸ் தளத்தில், “தவிர்க்க முடியாத ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன். வடக்கு காஷ்மீரில் வெற்றி பெற்ற எஞ்சினியர் ரஷீத்துக்கு வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
அம்ரித் பால் சிங்:
இதே போன்று இந்தியாவிலிருந்து பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்து `காலிஸ்தான்’ என்ற தனிநாடாக அறிவிக்க வேண்டும் எனக்கோரியவர் அம்ரித் பால் சிங். இந்திய அரசுக்கு எதிராக பிரிவினை கோஷம், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக கொலை மிரட்டல், பஞ்சாப் காவல்துறையினர் மீது தாக்குதல் உள்ளிட்டப் பல்வேறு காரணங்களுக்காக அம்ரித் பால் சிங் மீது பஞ்சாப் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
ஆனால், தொடர்ந்து பல மாதங்களாக தலைமறைவாக இருந்த அம்ரித் பால் சிங்கை கடந்த ஏப்ரல் மாதம் பஞ்சாப் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சிறையிலிருந்தபடியே நாடாளுமன்றத் தேர்தலில் பஞ்சாப் மாநிலம் காதூர் சாகிப் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக அம்ரித் பால் சிங் போட்டியிட்டார். அவருக்கு எதிராக காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக, சிரோண்மணி அகாலிதளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் நிலையில் காதூர் சாகிப் தொகுதில், சுமார் 1,38,561 வாக்குகள் வித்தியாசத்தில் அம்ரித் பால் சிங் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
மதியம் 3 மணி நிலவரப்படி, அம்ரித் பால் சிங் சுமார் 3,14,735 வாக்குகள் பெற்றுள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்கு வராமல், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையிலிருந்தபடியே அம்ரித் பால் சிங் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் இருப்பது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…