மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை ஒட்டி இன்றே (டிசம்பர் 4) முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன், முன்னாள் எம்.பி.கே.சி பழனிசாமி ஆகியோர் மரியாதை செலுத்தியுள்ளனர்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016 அக்டோபர் 5ஆம் தேதி உயிரிழந்ததாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்தது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், தனது அறிக்கையில் ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே காலமானார் என்று குறிப்பிட்டுள்ளது.
இதனால், டிசம்பர் 4ஆம் தேதியே ஜெயலலிதா நினைவு தினத்தை அனுசரிக்க வேண்டும் என்று அதிமுகவில் சிலர் குரல் எழுப்பினர். அதிமுக முன்னாள் எம்.பி. கே சி பழனிசாமியும் டிசம்பர் 4ஆம் தேதியே நினைவு தினத்தை அனுசரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் நாளை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
இந்நிலையில், அதிமுக எம்.பி. கே,சி,பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் இன்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த கே.சி.பழனிசாமி, “ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தவர் எடப்பாடி பழனிசாமி. அமைக்க சொன்னது பன்னீர்செல்வம்.
எனவே இருவரும் அந்த ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
டிசம்பர் 4ஆம் தேதியான இன்று அம்மாவின் நினைவு தினத்தை அனுசரித்திருக்க வேண்டும். ஒன்றரை கோடி தொண்டர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் அம்மாவின் உண்மையான நினைவு நாளான இன்று நாங்கள் அஞ்சலி செலுத்தினோம்.
அம்மாவின் நினைவு தினம் டிசம்பர் 4 என அரசாங்க பதிவேடுகளில் திருத்தம் செய்ய வேண்டும். அதிமுக தொண்டர்களுக்கு இரண்டு விஷயங்களில் சமரசமே இல்லை. ஒன்று ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார்? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மற்றொன்று கொடநாடு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

அதுபோன்று நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஜெயலலிதாவுக்கு திதி கொடுத்து, அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அஞ்சலி செலுத்தினார்.
அரிசி, காய்கறிகள், பிண்டம் உள்ளிட்டவற்றை வைத்து திதி கொடுத்து அதனை கடலில் கரைத்தார். இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பிரியா