5 மாநில சட்டமன்றத் தேர்தல் அலசல் மினி தொடர்- 12 BJP’s dual strategy in Chhattisgarh
மோகன ரூபன்
ஐந்து மாநில தேர்தல் அமர்க்களப்படும் நேரம் இது. அந்த ஐந்து மாநிலங்களில் ஒன்றான சத்தீஷ்கரில், ஒரே சரவெடி அதிரடியாக இருக்கிறது.
‘சத்தீஷ்கரில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து வெளியேற்றும் கவுண்ட் டவுண் தொடங்கி விட்டது’ என்று பிரதமர் மோடி ஒருபக்கம் பிரசாரம் செய்ய, மறுபக்கம், ‘கிரஹலட்சுமி யோஜனா’ திட்டத்தின்கீழ், பெண்களுக்கு ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய்’ என்று அறிவித்து அசத்தியிருக்கிறார் சத்தீஷ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல்.
சத்தீஷ்கரில் மொத்தம் 90 சட்டமன்றத் தொகுதிகள். அதில் 20 தொகுதிகளுக்கு கடந்த 7ஆம்தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்து விட்டது. 70.87% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. எஞ்சிய 70 தொகுதிகள் இந்த மாதம் 17ஆம்தேதி வாக்குப் பதிவைச் சந்திக்க இருக்கின்றன. அதற்குள்தான் இத்தனை பரபரப்பு பந்தாடி வருகிறது.
சத்தீஷ்கரின் இருபெரும் கட்சிகளான ஆளும் காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவும் 90 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி நடப்பு எம்.எல்.ஏ.க்கள் 71 பேர்களில், 22 பேரை கைவிட்டு புதிய வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது.
மாமனாருக்கு போட்டியாக மருமகன்!
முதல்வர் பூபேஷ் பாகேல், துர்க் மாவட்டத்தில் உள்ள படான் தொகுதியில் போட்டியிடுகிறார்., அவரை எதிர்த்து பாரதிய ஜனதா வேட்பாளராக நிற்பவர் அவரது மருமகன் விஜய் பாகேல் எம்.பி.
சத்தீஷ்கரின் முதல் முதல்வரான அஜித் ஜோகியின் மகன், ஜனதா காங்கிரஸ் சத்தீஷ்கர் (ஜே.சி.சி.-ஜே) கட்சியின் சார்பாக களத்தில் நிற்கிறார். அந்தக் கட்சியின் தலைவரே அவர்தான்.
போதாக்குறைக்கு 16 தொகுதிகளில் போட்டியிடும் ஹமர் ராஜ் கட்சி என்படும் எச்.ஆர்.பி. என்ற பழங்குடியினர் கட்சி, அந்த கட்சியின் தலைவர் பி.எஸ்.ராவ் தேவ்-ஐ, படான் தொகுதியில் நிறுத்தியுள்ளது. ஆக படான் தொகுதி செம சூடாக இருக்கிறது.
மீண்டும் அதே துருப்புச்சீட்டு!
இந்த தேர்தலில் முதல்வர் பாகேல் ஏராளமான வாக்குறுதிகளை அளித்திருக்கிறார். கிரஹலட்சுமி யோஜனா’ திட்டத்தின்கீழ், பெண்களுக்கு ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய்’ என்பது அவரது லேட்டஸ்ட் அறிவிப்பு.
‘நான், நானூறு ரூபாய் மின் கட்டண தள்ளுபடி செய்தேன். ரமன்சிங் முதல்வராக இருந்தபோது உஜ்வாலா அட்டை வைத்திருந்தவர்களுக்கு மட்டுமே மின்கட்டண தள்ளுபடி செய்தார்’ என்று கூறியிருக்கிறார் பூபேஷ் பாகேல்.
‘மானிய விலையில் பெண்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்’ என்பன போன்ற ஏராளமான வாக்குறுதிகளை முதல்வர் பூபேஷ் பாகேல் அறிவித்திருந்தாலும் அதில், ஸ்டார் அந்தஸ்து பெற்ற வாக்குறுதியாகக் கருதப்படுவது விவசாயிகளின் கடன் தள்ளுபடிதான்.
இந்த விவசாயிகளின் கடன் தள்ளுபடி வாக்குறுதிதான், 2018ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி, ஆட்சிக்கு வர உதவியது. ஆட்சிக்கு வந்தபிறகு பூபேஷ் பாகேல் அரசு 9,000 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்திருக்கிறது. 18 லட்சம் விவசாயிகள் இதனால் பயனடைந்திருக்கிறார்கள்.
இந்தநிலையில், விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்ற துருப்புச்சீட்டுடன் இந்த முறையும் தேர்தலை எதிர்கொண்டிருக்கிறார் முதல்வர் பூபேஷ் பாகேல்.
பலனளிக்குமா பாஜகவின் ஊழல் குரல்?
இதற்கு எதிராக, ‘கடன் தள்ளுபடி முடியாத காரியம். மாநிலம் கடனில் இருக்கிறது. கருவூலம் காலி’ என்ற பரப்புரையை பாரதிய ஜனதா முன்னெடுத்து வருகிறது.
காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. நிலக்கரி வரி ஊழல், மதுபான ஊழல் என்ற தினுசுதினுசான அந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் ‘மகாதேவ் பந்தய செயலி ஊழலை’ பிரதமர் மோடி அவரது பிரசாரத்தின்போது சுட்டிக்காட்டி குறை கூறியிருக்கிறார்.
‘சத்தீஷ்கரில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால், மேற்கண்ட ஊழல்களைச் செய்தவர்கள் தலைகீழாகக் கட்டி தொங்கவிடப்படுவார்கள்’ என்று அவரது பாணியில் தேர்தல் பிரசாரத்தில் அச்சுறுத்தி இருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
‘மோடி பக்கம் யாராவது சேர்ந்தால் அவர்களது ஊழல் கறைகள் அடியோடு காணாமல் போய்விடும். மோடி என்ற வாஷிங் பவுடர் அந்த அளவுக்கு திறன் வாய்ந்தது. அஜித் பவார் அமலாக்கத்துறையால் சிக்கலுக்கு ஆளானார். மோடி பக்கம் சேர்ந்தார். அவரது கறைகள் காணாமல் போய்விட்டன‘ என்று ஊழல் குற்றச்சாட்டுகளை ஏற்கெனவே எள்ளி நகையாடி ஏளனம் செய்து விட்டார் முதல்வர் பாகேல். இந்தமுறையும் ஊழல் குற்றச்சாட்டுகளை அவர் பொருட்படுத்தமாட்டார் என்பது உறுதி.
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் இந்தமுறை முதல்வர் வேட்பாளர் என யாரையும் பாரதிய ஜனதா அறிவிக்கவில்லை. இதை சாதகமாக்கிக் கொண்டுள்ள சத்தீஷ்கர் முதல்வர் பாகேல், ‘சத்தீஷ்கரில் பா.ஜ.க.வுக்கு முதல்வர் வேட்பாளரே இல்லை. பா.ஜ.க.வுக்கு முகமே இல்லை. பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ரமன்சிங், இப்போது முழு பலத்தில் இல்லை’ என்று கேலி செய்து வருகிறார்.
மதவாத ஆயுதம்; கையிலேந்தும் பாஜக!
சத்தீஷ்கர் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு மதவாத பிரசாரத்தை பாரதிய ஜனதா கையில் எடுத்து உள்ளது. சத்தீஷ்கருக்குத் தொடர்பில்லாத ஹமாஸ்- இஸ்ரேல் போர், முகலாய பேரரசர் அக்பர் போன்ற சொல்லாடல்கள் பிரசாரத்தில் கையாளப்பட்டுள்ளன. துர்க், பிலாஸ்பூர், ராஜநந்த்கான் பகுதிகளைக் குறிவைத்து இந்த மதவாத, வகுப்புவாத பரப்புரை அதிக அளவில் நடந்திருக்கிறது.
90 உறுப்பினர்கள் கொண்ட சத்தீஷ்கர் சட்டமன்றத்தில், ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று ஒரேயொரு இஸ்லாமியர்தான் இருக்கிறார். அவர் முகமது அக்பர். வனத்துறை அமைச்சராக இருக்கும் முகமது அக்பர், கவர்தா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
அவரை குறி வைத்து, ‘ஒரு அக்பர் நூறு அக்பர்களை கொண்டு வந்து விடுவார்’ என்று பா.ஜ.க பிரசாரம் செய்ய, காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் இது பற்றி முறையிட்டு உள்ளது.
இருந்தாலும்கூட, பா.ஜ.க.வின் இந்த இந்து முஸ்லீம் பிரிவினைவாத பிரசாரம், 18 தொகுதிகளில் காங்கிரசுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
சத்தீஷ்கர் தேர்தலில் முதல்வர் பாகேலுக்கு எதிராக இரண்டு வியூகங்களை பாரதிய ஜனதா கடைப்பிடிக்கிறது.
1. இந்து-முஸ்லீம் பிரச்சினையைக் கிளப்பி, இந்துக்களின் வாக்குகளை முடிந்த அளவுக்கு காங்கிரசுக்கு விழாமல் தடுப்பது,
2. முதல்வர் பாகேலுக்கு எதிராகத் தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்குவது. இந்த இரண்டு பணிகளையும் பா.ஜ.க செவ்வனே செய்து வருகிறது.
பாகேலுக்கு உள்ள நெருக்கடி!
சத்தீஷ்கரைப் பொறுத்தவரை முதல்வர் பாகேலுக்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளே இரண்டு மறைமுக போட்டியாளர்கள் உள்ளனர்.
ஒருவர் துணை முதல்வர் டி.எஸ்.சிங் தியோ. கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தலில் சுர்குஜா பகுதியில் 14 தொகுதிகளில் காங்கிரஸ் வெல்ல காரணமாக இருந்தவர் டி.எஸ்.சிங் தியோ. அவர்தான் முதல்வர் ஆவார் என்று கருதப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைமை, பூபேஷ் பாகேலை முதல்வராக்கியது.
டி.எஸ்.சிங் தியோ தற்போது அம்பிகாபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் வெற்றிபெற்றால் சுழற்சிமுறை முதல்வர் என்ற பிரச்சினை பாகேலுக்கு வர வாய்ப்பிருக்கிறது.
அதேப்போல சத்தீஷ்கர் மாநிலத்தில், இதர பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த சாஹூ சமூகம் முக்கியமானது. இந்த சமூகத்தைச் சேர்ந்த தாம்ரத்வாஜ் சாஹூ, தற்போது கேபினட் அமைச்சராக இருக்கிறார். கடந்தமுறை இவரை முதல்வராக்கவில்லை என்ற மனத்தாங்கல் சாஹூ சமூக மக்களுக்கு இருந்தது.
நடப்புத் தேர்தலில் பாரதிய ஜனதா சாஹூ சமூகத்தைச் சேர்ந்த 9 வேட்பாளர்களையும், காங்கிரஸ் கட்சி அதே சமூகத்தைச் சேர்ந்த 7 வேட்பாளர்களையும் களத்தில் நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்தமுறை போலவே இந்தமுறையும் சாஹூ சமூகத்தை அலட்சியம் செய்வதாக ஒரு கருத்து அந்த சமூகத்தினரிடையே உள்ளது.
தேர்தலில் ஒருவேளை காங்கிரஸ் கட்சி வெற்றிவாகை சூடும்பட்சத்தில், முதல்வர் பதவிக்கான போட்டியில் தாம்ரத்வாஜ் சாஹூவும் பாகேலுக்குப் போட்டியாக இருப்பார் என்று கருதப்படுகிறது.
சத்தீஷ்கர் இரண்டாம் கட்ட தேர்தல் களம் பரபரப்பாக இருக்கும் இந்த சூழ்நிலையில் ‘மொத்தம் உள்ள வேட்பாளர்களில் 953 பேர்கள் குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள், அவர்களில் 56 பேர் மீது பெரிய அளவில் வழக்குகள் உள்ளன’ என்பது தனிச்செய்தி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கட்டுரையாளர் குறிப்பு:
மோகன ரூபன் மூத்த பத்திரிகையாளர், கவிஞர், மொழி பெயர்ப்பாளர், இயற்கை ஆர்வலர்.
உலக அரசியலில் இருந்து உள்ளூர் அரசியல் வரை பல்வேறு கட்டுரைகளை எழுதியிருக்கிறார், அரசியல் மட்டுமல்லாமல் வரலாறு, அறிவியல் துறைகளிலும் ஆர்வம் மிக்கவர். உலக அளவிலான புதிய தகவல்களை தேடிப் படித்து தமிழில் தந்து வருபவர். அந்தோணியார் காவியம், உவரியும் ஓபீரும், சந்தன உவரியில் சாலமன் கப்பல், திமிங்கல வேட்டை (மோபி டிக்), பிணந்தின்னிக் கழுகு (அமெரிக்க வல்லரசு சதிகள் பற்றியது), ஆண்டுவன் சேரல் (வரலாற்றுப் புதினம்), கவின் மிகு கானகம் உள்ளிட்ட 17 நூல்களின் ஆசிரியர். BJP’s dual strategy in Chhattisgarh
கிடுக்கிப்பிடியில் சிக்கிய கே.சி.ஆர்: விறுவிறுப்பாகும் தெலங்கானா தேர்தல் 11
மணிப்பூர் ஆகிவிடுமா மிசோரம்? தேர்தல் நிலவரம் க்ளைமாக்ஸ் ரிப்போர்ட்! 10
ம.பி. தேர்தலில் மாற்றத்துக்கான காற்று!-9
சத்தீஷ்கர்: முதல்வரை எதிர்த்து நிற்கும் மருமகன்! பிரியங்காவின் பிரம்மாண்ட வாக்குறுதிகள்!-8
மிசோரம் தேர்தல் : ‘ஓ! பா.ஜ.க.வின் கேம் பிளான் இதுதானா?’-7
கழன்று செல்லும் தலைவர்கள்.. கலகலக்கும் காங்கிரஸ்!-6
மிசோரம்: தேர்தல் மல்லுக்கட்டில் மலை மாநிலம்!-5
தெலங்கானா வடக்கின் தெற்கு, தெற்கின் வடக்கு! 5 மாநில தேர்தல் அலசல் மினி தொடர்-4
சோழன் ஆண்ட சத்தீஷ்கர்- 5 மாநில தேர்தல் -அலசல் மினி தொடர்-3
ராவணனின் மாமனார் வீடு ராஜஸ்தான் யாருக்கு?-2
5 மாநில தேர்தல்… வெற்றி வாய்ப்பு யாருக்கு? அலசல் மினி தொடர்!-1
கேரளாவில் அதிரடி: 5 வயது சிறுமியை கொடூர கொலை… மரண தண்டனை தீர்ப்பு!
கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ஓய்வூதியம்: நீதிமன்றம் உத்தரவு!