நடுரோட்டில் ஆட்டை வெட்டுவது ஏற்க முடியாது : உயர் நீதிமன்றம்!

Published On:

| By Kavi

நடுரோட்டில் ஆட்டை வெட்டி கொண்டாடுவதை ஏற்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றார்.

இதை கொண்டாடும் வகையில் திமுகவைச் சேர்ந்த சிலர் அண்ணாமலை புகைப்படம் மாட்டப்பட்ட ஆட்டை நடுரோட்டில் வெட்டி அதனை வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், பாஜக வழக்கறிஞர் மோகன்தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், இந்த சம்பவம் தொடர்பாக அரசிடமும் காவல்துறையிலும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார் .

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் அமர்வு முன்பு இன்று (ஜூலை 15) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, “இதுபோன்ற சம்பவங்கள் கிரிமினல் குற்றம் ஆகும். அதுமட்டுமல்லாது விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படியும் குற்றமாகும். இப்படி செய்வது ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். அரசியல் கட்சித் தலைவர்களின் புகைப்படங்களை அணிவித்து மக்கள் மத்தியில் சாலையில் விலங்குகளை துன்புறுத்தி வெட்டுவது உடனடியாக தடுக்கப்பட வேண்டும்” என்று வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, இதுபோன்ற விஷயங்களை  வேடிக்கை பார்க்க முடியாது. இது தொடர்பாக அரசு ஒரு வார காலத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி : கனமழைக்கு வாய்ப்பு!

டீன்ஸ் : விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share