அயலகத் தமிழர்களின் நலன் காக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் சார்பாக சென்னையில் கலைவாணர் அரங்கில் அயலகத் தமிழர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், உளங்கவர் ஓவியமே, உற்சாகக் காவியமே, ஓடை நறுமலரே, அன்பே, அமுதே, அழகே, உயிரே, இன்பமே, இனியத் தென்றலே, பனியே, கனியே என்றெல்லாம் தமிழை அழைக்கத் தோன்றுகிறது.
என்றாலும் தமிழை தமிழே என்று அழைக்கக்கூடிய சுகம் வேறு எதிலும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட தமிழுக்கு பெருமை சேர்க்கக்கூடிய வகையில் இன்று கூடியிருக்கிறோம்.
இன்றல்ல, நேற்றல்ல பல ஆயிரம் ஆண்டுகளாகவே உலகில் உள்ள நாடுகளோடு நல்லுறவுக் கொண்டிருந்த பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு.
அந்த பெருமையின் தொடர்ச்சியாகதான், தமிழ் நிலப்பரப்பின் அடையாளமாக அயலகத்தில் வாழக்கூடிய நீங்கள் வந்திருக்கிறீர்கள்.
எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்கு காடு திருத்தி கழனி செழிக்கச் செய்து தன்னை மட்டுமல்ல, தனக்கு வாழ்வளித்த நாட்டையும் செழிக்கச் செய்பவர்கள் தமிழர்கள்.

அயலகத்தில் குடியேறி வரும் தமிழர்கள் பணிபுரியும் இடங்களில் இன்னல்களையும், ஏமாற்றத்தையும் சந்திக்கும் நிலையும் இருந்து வருகிறது. 2010 ஆம் ஆண்டு அயலகத் தமிழர்களின் நலன் காக்க ஒரு துறையை உருவாக்கினார்.
2021 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற திராவிட மாடல் அரசு, தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி அயலகத் தமிழர்களின் நலனுக்கென ஒரு அமைச்சகத்தை உருவாக்கி அமைச்சரையும் உருவாக்கியுள்ளது.
அயலக மண்ணில் வசிக்கும் தமிழ் சொந்தங்களை ஒருங்கிணைக்கவும், அவர்களுக்கு தேவை ஏற்படும் சூழல்களில் உதவி புரிந்து வரும் தமிழ்ச்சங்கங்களை அங்கீகரிக்கவும் ஜனவரி 12 அன்று அயலகத் தமிழர் நாள் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதுதான் இன்று கொண்டாடப்படுகிறது.
புலம் பெயர்ந்த தமிழர்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தரவுகள் தயார் செய்யப்படும். வெளிநாடுகளில் பணிபுரிபவர்களின் குடும்பங்களில் இருந்து ஆண்டுக்கு 200 மாணவர்கள் தமிழ்நாடு பயன்பாடு சுற்றுலா அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளிநாடுகளில் பணிபுரியும் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாத ஓய்வூதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும். அயல்நாடு செல்பவர்கள் குறித்து தரவுத்தளம் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
கலை.ரா
வேலை வாய்ப்பு: வருமான வரி துறையில் பணி!
புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1,000 – ஒப்புதல் அளித்த ஆளுநர்- அமைச்சர் தகவல்